மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்யும் இளைஞர்களால் பொதுமக்கள் அச்சம்
நாகையில் மோட்டார் சைக்கிளில் வீலிங் செய்து பொதுமக்களை அச்சுறுத்தும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
நாகையில் மோட்டார் சைக்கிளில் வீலிங் செய்து பொதுமக்களை அச்சுறுத்தும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
விபத்துக்குள்ளாகும் அப்பாவி மக்கள்
நாகை நகர் பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளில் இளைஞர்கள் சிலர் மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது சாலைகளில் மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்று சாகசம் (வீலிங்) செய்கின்றனர். குறிப்பாக மாலை, இரவு நேரங்களில் இந்த சம்பவம் நடந்து வருகிறது. மோட்டார் சைக்கிளின் முன் சக்கரத்தை மேலே தூக்கியும், அதேபோல் பின் சக்கரத்தை தூக்கியும் புழுதி பறக்க சாகசம் செய்கின்றனர். இதனால் அந்த சாலையில் வரும் அப்பாவி பொதுமக்கள் விபத்தில் மாட்டிக்கொள்ளும் சம்பவங்கள் ஏற்படுகிறது.
புதிய பஸ் நிலையத்திலும்...
குறிப்பாக நாகை புதிய பஸ் நிலையத்தில் மாலை நேரங்களில் மோட்டார் சைக்கிளில் வரும் இளைஞர்கள், மின்னல் வேகத்தில் பயங்கர சத்தத்துடன் பஸ் நிலையத்தை சுற்றி வருகின்றனர். இது பஸ் நிலையத்தில் உள்ள பயணிகளை அச்சுறுத்துகிறது.
நகரின் முக்கிய பகுதிகளில் நின்று ஹெல்மெட் அணியாது உள்ளிட்ட காரணங்களை காட்டி அபராதம் விதிப்பதில் முனைப்பு காட்டும் போலீசார், இது போன்ற மோட்டார் சைக்கிள் சாகசங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.