ரேஷன் கடைக்கு பூட்டுப் போட்ட பொதுமக்கள்
அரிசி இல்லை என்று கூறியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ரேஷன் கடைக்கு பூட்டு போட்டனர்.
பேரணாம்பட்டு
அரிசி இல்லை என்று கூறியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ரேஷன் கடைக்கு பூட்டு போட்டனர்.
அலைக்கழிப்பு
பேரணாம்பட்டு அருகே உள்ள ஏரி குத்திமேடு ஹபிப் நகரில் பேரணாம்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் பகுதி நேர ரேஷன் கடை இயங்கி வருகிறது. இங்கு விற்பனையாளராக பேரணாம்பட்டு எர்த்தாங்கல் ஹக்கீம் வீதியிலுள்ள ரேஷன் கடையின் விற்பனையாளர் சதீஷ் என்பவர் பணி புரிந்து வருகிறார்.
இந்த கடையில் 870 குடும்ப அட்டைகள் உள்ளன. பகுதி நேர ரேஷன் கடையின் விற்பனையாளர் சதீஷ், ரேஷன் கடையை குறிப்பிட்ட நேரத்திற்கு திறக்காமலும், குடும்ப அட்டைதாரர்களுக்கு சரி வர உணவு பொருட்கள் வழங்காமல் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அரிசி வாங்க வரும் பொதுமக்களிடம் அரிசி இல்லை எனக் கூறி அலைகழிக்கப்பட்டு வந்ததாககவும் கூறப்படுகிறது.
ரேஷன் கடைக்கு பூட்டு
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 20 பேர் ரேஷன் கடைக்கு சென்று, கடையை இழுத்து பூட்டி பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவலறிந்த பேரணாம்பட்டு வட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம் விரைந்து சென்று பொது மக்களிடம் விசாரணை நடத்தி சமரசம் செய்து உணவு பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். சுமார் 1 மணி நேரம் கழித்து மதியம் 12.30 மணியளவில் ரேஷன் கடை திறக்கப்பட்டது.