நடுரோட்டில் பந்தல் போட்டு பொதுமக்கள் மறியல்


நடுரோட்டில் பந்தல் போட்டு பொதுமக்கள் மறியல்
x

ஆலங்காயம்-ஜமுனாமரத்தூர் சாலையில் பொதுமக்கள் நடு ரோட்டில் பந்தல் போட்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருப்பத்தூர்

ஆலங்காயம்-ஜமுனாமரத்தூர் சாலையில் பொதுமக்கள் நடு ரோட்டில் பந்தல் போட்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர் விபத்துகள்

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயத்தை அடுத்த ஆர்.எம்.எஸ். புதூர் பகுதியிலிருந்து காவலூர் பகுதிக்கு செல்லக்கூடிய, வனத்துறைக்கு சொந்தமான 9 அடி அகல மலை சாலை பராமரிப்பு பணிகளுக்காக நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வாணியம்பாடி, ஆலங்காயம் பகுதியிலிருந்து ஜமுனாமரத்தூர், போளூர், திருவண்ணாமலை பகுதிகளுக்கு செல்வதற்கு இந்த சாலை பயன்படுகிறது.

இருசக்கர வாகனங்கள், கார்கள், பஸ்கள், சரக்கு வாகனங்கள் என தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையில் செல்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் பயணிக்கும் இந்த சாலை மிகவும் குறுகலாக இருக்கின்ற காரணத்தினால், அவ்வப்போது விபத்துக்கள் ஏற்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த இடத்தில் ஏற்கனவே அப்பகுதியைச் சேர்ந்த ஒரு ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 6 பேர் சாலை விபத்தில் மரணமடைந்துள்ளனர்.

அரசுக்கு கோரிக்கை

மேலும் 2 வாகனங்கள் நேருக்கு நேர் சந்திக்கும் போது விலகிச்செல்ல முடியாத நிலை ஏற்பட்டு, போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, சாலையை அகலப்படுத்தி தரவேண்டுமென்று அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில், கடந்த சில மாதத்திற்கு முன்பு பழைய சாலை மீது புதிய தார்சாலை போடப்பட்டுள்ளது.

இதனால், சாலையின் உயரம் 2 அடிக்கும் மேல் உயர்ந்து விட்டதால், எதிர் திசையில் பயணிக்கும் இரண்டு வாகனங்கள் சந்திக்கும்போது ஒதுங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் 2 அடிக்கும் கீழே உள்ள பள்ளத்தில் வாகனங்களை இறக்குவதனால் விபத்துக்கள் ஏற்படுகிறது. இரண்டு சக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட்டு ஒதுங்க முயலும்போது, கீழே விழுந்து விபத்தில் காயப்படும் நிலை தொடர்வதால் சாலையை அகலப்படுத்த வேண்டுமென தொடர்ந்து பொதுமக்கள் அரசுக்கு கோரி கோரிக்கை வைத்திருந்தனர்.

சாலை மறியல்

கடந்த மாதம் சாலையை அகலப்படுத்த வந்திருந்த மாநில நெடுஞ்சாலை துறையினரை, வனத்துறையினர் அனுமதி இன்றி சாலையை அகலப்படுத்தும் பணி செய்ய முடியாது என்று பணியை தடுத்து நிறுத்தினர். இந்த நிலையில் நேற்றும் விபத்து ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த மலை கிராமத்தை சேர்ந்த சுமார் 500- க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் நொசக்குட்டை பகுதியில் நடு ரோட்டில் பந்தல் அமைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் மலைக்கு செல்லும் வாகனங்களும், மலையிலிருந்து கீழே இறங்கும் வாகனங்களும் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வரிசை கட்டி அணிவகுத்து நின்றன. அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் சாலையை சீரமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்காவிட்டால் சாலை மறியலை கைவிட மாட்டோம் என கிராம மக்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்த தகவல் அறிந்து வந்த வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ.செந்தில்குமார், வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன், தாசில்தார் சம்பத், இன்ஸ்பெக்டர் பழனி, நாகராஜன் ஜெயலட்சுமி, வனச்சரக அலுவலர் சோமசுந்தரம் உள்ளிட்டோர் மலை கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, 15 நாட்களுக்குள் சாலை அகலப்படுத்தும் பணியை முடித்து தருவதாக உறுதியளித்தனர். அதைத்தை தொடர்ந்து பொதுமக்கள் 5 மணி நேரமாக நடத்திய சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். பொதுமக்களின் இந்த திடீர் சாலை மறியலினால் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு ஏராளமான வாகனங்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசை கட்டி நின்றது.


Next Story