ரேஷன் கடைக்கு லாரியில் கொண்டு வந்த அரிசி மூடைகளை இறக்க விடாமல் போராட்டம் நடத்திய பொதுமக்கள் ;செண்பகராமன்புதூரில் பரபரப்பு


ரேஷன் கடைக்கு லாரியில் கொண்டு வந்த அரிசி மூடைகளை இறக்க விடாமல் போராட்டம் நடத்திய பொதுமக்கள் ;செண்பகராமன்புதூரில் பரபரப்பு
x

செண்பகராமன்புதூரில் ரேஷன் கடைக்கு லாரியில் கொண்டு வந்த அரிசி மூடைகளை இறக்க விடாமல் பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி,

செண்பகராமன்புதூரில் ரேஷன் கடைக்கு லாரியில் கொண்டு வந்த அரிசி மூடைகளை இறக்க விடாமல் பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தரமற்ற அரிசி வழங்குவதாக புகார்

செண்பகராமன்புதூர் ஊராட்சியில் 3 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. பஞ்சாயத்து அலுவலகம் அருகே முழுநேர கடையும், சமத்துவபுரம், இந்திராநகரில் பகுதிநேர கடைகளும் உள்ளன. இங்கு பல மாதங்களாக தரமற்ற உருண்டை அரிசி வழங்கப்படுவதாக பொதுமக்கள் புகார் கூறி வருகிறார்கள்.

இந்தநிலையில் நேற்று காலையில் ரேஷன் கடைகளுக்கு லாரியில் அரிசிமூடைகள் கொண்டுவரப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் இந்த அரிசியும், பழையது போல் தரமற்ற அரிசியாக இருக்குமோ என்று அச்சம் அடைந்தனர். இதுகுறித்து பஞ்சாயத்து தலைவர் கல்யாணசுந்தரத்திடம் தெரிவித்தனர்.

உடனே அவர் அங்கு வந்து அரிசி மூடைகளை சோதனை செய்த போது அதில் சுமார் 250 மூடைகளில் உருண்டை அரிசியும், 45 மூடைகளில் நல்ல அரிசியும் இருந்ததை அறிந்தனர்.

போராட்டம்

உடனே பொதுமக்கள் 'இந்த அரிசி எங்களுக்கு வேண்டாம்' என கூறி அரிசி மூடைகளை இறக்க விடாமல் பஞ்சாயத்து தலைவர் கல்யாணசுந்தரம் தலைமையில் லாரி முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதில் பஞ்சாயத்து துணைத்தலைவர் தேவதாஸ், செண்பகராமன்புதூர் காங்கிரஸ் தலைவர் நீலாமணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வட்ட வழங்கல் அலுவலக அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். தொடர்ந்து அரிசி மூடைகள் இறக்கப்பட்டன. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story