இறைச்சி கழிவுகளை ஏற்றி வந்த வேனை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்


இறைச்சி கழிவுகளை ஏற்றி வந்த வேனை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 14 April 2023 12:15 AM IST (Updated: 14 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாநகராட்சி குப்பை கிடங்கில் தீப்பற்றி எரிந்த நிலையில் இறைச்சி கழிவுகளுடன் அங்கு வந்த சரக்கு வேனை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்

குப்பை கிடங்கில் தீ

திண்டுக்கல் முருகபவனம் பகுதியில் மாநகராட்சி குப்பைக்கிடங்கு செயல்பட்டு வருகிறது. இந்த குப்பை கிடங்கு தற்போது முழுமையாக பயன்படுத்தப்படவில்லை. இருந்த போதிலும் இங்கு ஏற்கனவே மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகளில் அடிக்கடி தீப்பற்றி எரிகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிப்பதுடன் பொதுமக்களும் அவதிப்பட்டனர்.

இதையடுத்து குப்பை கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி அந்த இடத்தில் பஸ் நிலையம் அமைக்கவும் மாநகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் அதற்கான பணிகள் இன்னும் தொடங்கவில்லை. இந்த நிலையில் நேற்று மாலையில் குப்பை கிடங்கில் மீண்டும் தீப்பற்றி எரிந்தது. சிறிது நேரத்தில் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது.

ஆர்ப்பாட்டம்

இதையறிந்த முருகபவனம், முத்துராஜ்நகர், இந்திராநகர், கருணாநிதி நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குப்பை கிடங்கு முன்பு திரண்டனர். அப்போது இறைச்சி கழிவுகளை ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் ஒன்று குப்பை கிடங்குக்கு வந்தது. இதைப்பார்த்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் சரக்கு வேனை சிறைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது குப்பை கிடங்குக்குள் இனிமேல் குப்பைகளை கொட்டக்கூடாது. இங்குள்ள குப்பைகளை விரைவாக அகற்றிவிட்டு பஸ் நிலையம் அமைக்கும் பணிகளை அதிகாரிகள் தொடங்க வேண்டும். அதுவரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என கூறி கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மேற்கு போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை.

அனுமதிக்கவில்லை

இதற்கிடையே தீ விபத்து குறித்து தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள், 2 தண்ணீர் லாரிகளை முருகபவனம் பகுதிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அந்த லாரிகளை குப்பை கிடங்குக்குள் செல்ல விடாமல் பொதுமக்கள் தடுத்தனர். இதையடுத்து மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் சுரேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது இன்னும் 3 மாதங்களில் குப்பை கிடங்கு பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். அதன் பின்னர் தண்ணீர் லாரிகள் மூலம் குப்பை கிடங்கில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.


Next Story