பொதுமக்கள் அகம், புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்
பொதுமக்கள் தங்களின் அகம், புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று வேலுரில் நடந்த சுகாதார பேரவை நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் பேசினார்.
பொதுமக்கள் தங்களின் அகம், புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று வேலுரில் நடந்த சுகாதார பேரவை நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் பேசினார்.
சுகாதார பேரவை
வேலூர் மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மாவட்ட சுகாதார பேரவை வேலூர் டவுன் ஹாலில் இன்று நடந்தது.
வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், இணை இயக்குனர்கள் கிருஷ்ணராஜ் (பொது சுகாதாரத்துறை), ரவிக்குமார் (சுகாதார சீரமைப்பு திட்டம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வேலூர் மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் (பொறுப்பு) ஹேமலதா வரவேற்றார்.
நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி வைத்து பேசியதாவது:-
பொதுமக்கள் தங்கள் உடலை நோய் நொடியின்றி பேணிக்காக்க வேண்டும். பெரும்பாலானோர் தங்கள் வீட்டை தூய்மையாக பராமரிப்பார்கள். ஆனால் சுற்றுப்புறத்தை அவ்வாறு பராமரிப்பதில்லை. வீட்டை பராமரிப்பது போன்று சுற்றுப்புறத்தையும் தூய்மையாக பராமரிக்க வேண்டும்.
மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளை தூய்மை பணியாளர்கள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
அகம், புறத்தை தூய்மையாக...
அதேபோன்று தொற்றாநோய்களான கண்பார்வை குறைவு, ரத்த அழுத்தம், சக்கரை நோய் உள்ளிட்டவற்றுக்கு மருத்துவமனையில் உரிய சிகிச்சை எடுப்பதன் மூலம் குணப்படுத்த முடியும்.
பொதுமக்கள் தங்கள் அகம், புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். சாலை விதிகளை முறையாக பின்பற்றாமல் வாகனம் ஓட்டி பலர் விபத்து ஏற்படுத்துகிறார்கள். விபத்தில் வாகனம் ஓட்டுபவர் மட்டுமல்ல எதிரே வருபவர்களும் சிக்கி கை, கால் உள்ளிட்ட உடல் உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன.
சில வேளைகளில் உடல் உறுப்புகள் இழப்பு மற்றும் உயிர்போகும் நிலையும் ஏற்படுகிறது. எனவே சாலை விதிகளை பின்பற்றி வாகனம் ஓட்ட வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகளையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
அவ்வப்போது டாக்டர்கள் மருத்துவமனைகளை ஆய்வு செய்ய வேண்டும். மருத்துவமனைகளுக்கு தேவையான மருத்துவ கருவி, உபகரணங்களை கேட்டு பெற வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
பொதுமக்களின் கருத்துகள்
அதைத்தொடர்ந்து அரசு மருத்துவமனை டாக்டர்கள், ஆரம்ப, நகர்புற சுகாதார நிலைய டாக்டர்கள், உள்ளாட்சி அமைப்பினர், பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள மருத்துவமனை, சுகாதார நிலையத்துக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் குறித்து பேசினார்கள்.
இந்த கருத்துகள் பதிவு செய்யப்பட்டன. இவை சென்னையில் மாநில அளவில் நடைபெறும் சுகாதார பேரவை நிகழ்ச்சியில் தெரிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில், துணை இயக்குனர்கள் மணிமேகலை (குடும்பநலம்), பிரித்தா (தொழுநோய்), ஜெயஸ்ரீ (காசநோய்), மாநகர் நலஅலுவலர் கணேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.