பொதுமக்கள் திறந்தவெளியில் அசுத்தம் செய்யாமல் கழிப்பறைகளை பயன்படுத்த வேண்டும்:கலெக்டர் செந்தில்ராஜ்


பொதுமக்கள் திறந்தவெளியில் அசுத்தம் செய்யாமல் கழிப்பறைகளை பயன்படுத்த வேண்டும்:கலெக்டர் செந்தில்ராஜ்
x
தினத்தந்தி 28 Jan 2023 12:15 AM IST (Updated: 28 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் திறந்தவெளியில் அசுத்தம் செய்யாமல் கழிப்பறைகளை பயன்படுத்த வேண்டும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தி உள்ளார்.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

திறந்தவெளியில் அசுத்தம் செய்யாமல் கழிப்பறைகளை பயன்படுத்த வேண்டும் என்று எப்போதும்வென்றானில் நடந்த கிராமசபை கூட்டத்தில் பொதுமக்களுக்கு கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தினார்.

கிராமசபை கூட்டம்

எப்போதும்வென்றான் கிராமத்தில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், எப்போதும்வென்றான் பஞ்சாயத்தில் பெரும்பாலான வீடுகளில் கழிப்பறைகள் உள்ளன. மீதமுள்ள வீடுகளிலும் கழிப்பறைகள் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்படும். அனைவரும் கழிப்பறைகளை பயன்படுத்த வேண்டும்.

இளம்பெண்கள் பாதிப்பு

திறந்தவெளியில் அசுத்தம் செய்வதால் நிலத்தடி நீர் மாசடைகிறது. இளம்பெண்கள் ரத்த சோகை நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் அவர்கள் வேலை செய்ய முடியாமல் பாதிக்கப்படுவதோடு, வரும் காலங்களில் கருவுறும்போதும் பாதிப்பு ஏற்படுகிறது. குழந்தைகள் குறைந்த எடையுடன் பிறக்கின்றன. மேலும் பிரசவத்தின் போது அதிக ரத்தப்போக்கினால் மரணம் கூட நிகழும் வாய்ப்புகள் உள்ளது. இவ்வாறு திறந்த வெளியில் அசுத்தம் செய்வதால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன.

கழிப்பறைகளை...

எனவே அனைவரும் கழிப்பறைகளை பயன்படுத்த வேண்டும். அரசு அனைத்து வீடுகளுக்கும் கழிப்பறைகள் கட்டி பயன்படுத்துவதற்கு வலியுறுத்தி வருகிறது. கிராம சபைக்கூட்டத்தில் கொடுக்கப்படும் கோரிக்கை மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு வெகுவிரைவில் தீர்வுகள் காணப்படும். எப்போதும்வென்றான் கிராமத்திற்கு ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, பள்ளியினை தரம் உயர்த்துதல், பள்ளி சுற்றுச்சுவர் கட்டுதல் மற்றும் விளையாட்டு பூங்கா மேம்படுத்துதல் போன்ற பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த ஊராட்சியை முன்மாதிரி ஊராட்சியாக மாற்ற பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும், என்றார்.

முன்னதாக அரசின் திட்டங்கள் குறித்து பல்வேறு துறைகள் சார்பாக அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை கலெக்டர் பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து மாவட்ட சமூக நல அலுவலகம் சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற உறுதிமொழியினையும், தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழியினையும் கலெக்டர் தலைமையில் அனைவரும் எடுத்துக்கொண்டனர்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி, மாவட்ட மருத்துவ பணிகள் தொழுநோய் துணை இயக்குனர் யமுனா, மாவட்ட சமூக நல அலுவலர் ரதிதேவி, மாவட்ட வழங்கல் அலுவலர் அபுல்காசிம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் லோகநாதன், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் ராதாகிருஷ்ணன், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் பழனிவேலாயுதம், ஓட்டப்பிடாரம் தாசில்தார் நிஷாந்தினி, கூடுதல் ஆணையாளர் பாண்டியராஜன் மற்றும் அரசு அலுவலர்கள், கிராம பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


Next Story