சாலை பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்


சாலை பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்
x
தினத்தந்தி 7 Jan 2023 12:15 AM IST (Updated: 7 Jan 2023 8:29 PM IST)
t-max-icont-min-icon

திருவட்டார் அருகே தரமற்ற பாறைப்பொடி பயன்படுத்தியதாக சாலை பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி

திருவட்டார்:

திருவட்டார் அருகே தரமற்ற பாறைப்பொடி பயன்படுத்தியதாக சாலை பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சாலை விரிவாக்கப் பணி

திருவரம்பில் இருந்து நாகக்கோடு வரையில் சுமார் 4 கி.மீ. தூரம் சாலை மிகவும் குண்டும், குழியுமாக மோசமான நிலையில் இருந்தது. எனவே சாலைைய விரிவாக்கம் செய்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து சாலையை சீரமைக்க ரூ.3.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இதற்கான வேலைகள் சமீபத்தில் தொடங்கியது.

இந்தநிலையில் நேற்று திருவரம்பு பகுதியில் சாலையை அகலப்படுத்துவதற்காக சாலையோரம் சுமார் 2½ அடி ஆழத்தில் மண் அப்புறப்படுத்தப்பட்டது. பின்னர் மண் அகற்றப்படுத்தப்பட்ட இடத்தில் தரமான ஜல்லிகள் போட்டு நிரப்புவதற்கு பதிலாக தரம் குறைந்த கழிவுகள் நிறைந்த பாறைப்பொடிகள் கொண்டு வந்து நிரப்பியதாக கூறப்படுகிறது.

பாறைப்பொடிகள் அகற்றம்

இதை கண்ட அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், இளைஞர்கள் அங்கு திரண்டனர். அவர்கள் தரமான முறையில் சாலை பணியை மேற்கொள்ள வலியுறுத்தி பணியை தடுத்து நிறுத்தினர். அத்துடன் பொதுமக்கள் நெடுஞ்சாலைத்துறை உயரதிகாரிகளை செல்போனில் ெதாடர் கொண்டு, சாலை விரிவாக்க பணிக்கு தரமற்ற பாறைப்பொடியை கொட்டுவதாக புகார் கூறினர்.

இதையடுத்து அதிகாரிகள் வேலையில் ஈடுபட்டவர்களை செல்போனில் ெதாடர்பு கொண்டு சாலையில் கொட்டிய கழிவு கலந்த பாறைப்பொடிகளை அப்புறப்படுத்த சொன்னதாக தெரிகிறது. இதையடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் பாறைப்பொடிகள் டெம்போவில் ஏற்றி அப்புறப்படுத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த காட்சி சமூக வலைத்தலங்களில் வைரலானது.

விரைவில் முடிக்க கோரிக்கை

சாலை பணி தொடங்கப்பட்டதால் திருவரம்பில் இருந்து நாகக்கோடு வழியாக செல்லும் பஸ்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது.

எனவே நெடுஞ்சாலைத்துறையினர் சாலைப்பணியை தரமாக மேற்கொண்டு விரைவில் முடிக்க வேண்டும் என இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story