சாலை பணியை மீண்டும் தடுத்து நிறுத்திய பொதுமக்கள்
குழித்துறையில் சாலை பணியை மீண்டும் தடுத்து நிறுத்திய பொதுமக்கள்
குழித்துறை,
குழித்துறை கிராம அலுவலகம் அருகில் இருந்து கல்லுகட்டி வரை எம்.எஸ்.சாலை உள்ளது. இந்த சாலை கடந்த 10 ஆண்டுகளாக சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதைதொடர்ந்து குழித்துறை நகராட்சி சார்பில் சாலைைய சீரமைக்க நகர்ப்புற வளர்ச்சி மேம்பாட்டு திட்டத்தில் ரூ.52 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான பணிகள் கடந்த மாதம் தொடங்கப்பட்டது. ஆனால், சாலை முறையாக அமைக்கப்படவில்லை. இதனால், சாலையில் ஜல்லியை கொட்டி முறையாக தார் போட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால் இந்த நிபந்தனை டெண்டரில் இல்லை என தெரிவிக்கப்பட்டதால் சாலை பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சாலை சீரமைப்பு பணி நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் 2-வது முறையாக நேற்று முன்தினம் மீண்டும் சாலை பணி தொடங்கியது. அப்போது, பணியாளர்களிடம் சாலையை தரமாக அமைக்க வேண்டும் என்று குழித்துறை நகராட்சி துணைத்தலைவர் பிரபின் ராஜா, நகராட்சி கவுன்சிலர் ரவி மற்றும் பொதுமக்கள் எடுத்து கூறி பணியை தடுத்து நிறுத்தினர். இதைத்தொடர்ந்து 2-வது முறையாக சாலை சீரமைப்பு பணி நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.