காரிப்பட்டியில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்
காரிப்பட்டியில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அயோத்தியாப்பட்டணம்:
அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள காரிப்பட்டி நேரு நகர் பகுதியில் பிரதான சாலை ஓரத்தில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சாக்கடை கால்வாய் அமைக்கும் போது பிரதான சாலையை ஆக்கிரமிப்பு செய்வதாக குற்றம்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து அந்த பகுதி பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர், சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர். அப்போது அங்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் மனோஜ் சூரியன் மற்றும் செயலாளர் மணியிடம் பிரதான சாலை ஆக்கிரமிப்பு செய்யப்படுவதாக தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த காரிப்பட்டி போலீசார் அப்பகுதிக்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொதுமக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள். கலைந்து சென்றனர்.