சுசீந்திரத்தில் மின் கம்பிகளை மண்ணுக்கடியில் பதிக்கும் பணி பொதுமக்கள் திடீரென தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
சுசீந்திரத்தில் உயர் மின்னழுத்த கம்பிகளை மண்ணுக்கடியில் பதிக்கும் பணி நடந்தது. அப்போது மண்ணுக்குள் கிடந்த வரிகற்களை வெளியே எடுத்து போட்டதால் பொதுமக்கள் பணியை தடுத்து நிறுத்தினர்.
சுசீந்திரம்:
சுசீந்திரத்தில் உயர் மின்னழுத்த கம்பிகளை மண்ணுக்கடியில் பதிக்கும் பணி நடந்தது. அப்போது மண்ணுக்குள் கிடந்த வரிகற்களை வெளியே எடுத்து போட்டதால் பொதுமக்கள் பணியை தடுத்து நிறுத்தினர்.
ரூ.38 லட்சத்தில்...
தேரோடும் ரத வீதியில் உள்ள கோவில் நகரங்களில் மின் கம்பிகளை பூமிக்கு அடியில் பதித்து தேரோட்டம் நடத்தும் படி தமிழக அரசு அறிவித்தது. இதை தொடர்ந்து சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் தேரோடும் ரத வீதிகளில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வீடுகளில் உள்ள மின் ஒயர்கள் (சர்வீஸ் லைன்) மண்ணுக்கடியில் பதிக்கப்பட்டது. இந்தநிலையில் கோவில் நுழைவு வாயில் முதல் கலையரங்கம் அருகில் உள்ள டிரான்ஸ்பார்மர் வரை உயர் மின்னழுத்த கம்பிகளை மண்ணுக்கடியில் பதிக்கும் பணி மின்சார துறை சார்பில் ரூ.38 லட்சம் செலவில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டிய போது மண்ணுக்குள் இருந்த வரிகற்கள் அனைத்தையும் ஊழியர்கள் வெளியே எடுத்துப் போட்டனர். மீண்டும் குழியை மூடிய போது வரிகற்களை பதிக்காமல் மூடினர்.
பொதுமக்கள் எதிர்ப்பு
இதனால் கோவில் பணியாளர்கள் மற்றும் ஊர்மக்கள் திடீர் சர்ச்சையை உருவாக்கினர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, 'வளைவுப்பகுதியில் தேர் வரும் போது தேரின் சக்கரம் பூமிக்கு அடியில் புதையாமல் இருக்க அன்றைய காலத்திலேயே வரிகற்கள் புதைக்கப்பட்டது. எனவே மீண்டும் வரிகற்களை பூமிக்கடியில் பதித்து மணல் மூடி பணிகளை செய்ய வேண்டும்' என்றனர். அத்துடன் பொதுமக்கள் திடீரென பணிகளை தடுத்து நிறுத்தி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து கோவில் இணை ஆணையர் ரத்னவேல்பாண்டியன், மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் மற்றும் சுசீந்திரம் மின்வாரிய இளநிலை பொறியாளர் பெருமாள் ஆகியோர் சம்பவம் இடத்தை பார்வையிட்டனர். அத்துடன் மூடப்பட்ட குழியை மீண்டும் தோண்டி வரி கற்களை பதித்து பணிகள் தொடரும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
--