குடிநீர் குழாய் பதிக்கும் பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்
ரீத்தாபுரம் பேரூராட்சியில் குடிநீர் குழாய் பதிக்கும் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து கவுன்சிலர்கள் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
குளச்சல்:
ரீத்தாபுரம் பேரூராட்சியில் குடிநீர் குழாய் பதிக்கும் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து கவுன்சிலர்கள் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ரீத்தாபுரம் பேரூராட்சி
குளச்சல் அருகே உள்ள ரீத்தாபுரம் பேரூராட்சியின் 1-வது வார்டு பகுதி வடக்கு எல்லையிலும், பாலப்பள்ளம் பேரூராட்சியின் 10-வது வார்டு தெற்கு எல்லையிலும் தெற்கு பிடாகை ஊர் உள்ளது. இங்கு கடந்த 3 மாதத்திற்கு முன்பு ரீத்தாபுரம் பேரூராட்சி பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்கு ஆழ்துளை கிணறு போடப்பட்டுள்ளது. இதற்கு தெற்கு பிடாகை ஊர்மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் வினியோகத்திற்காக பழைய குழாயுடன் புதிய குழாயை இணைக்கும் பணி நடந்தது. இதனையறிந்த தெற்கு பிடாகை ஊர்மக்கள் அங்கு திரண்டு குடிநீர் குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தகவலறிந்த பேரூராட்சி செயல் அலுவலர் சங்கர் கணேஷ், தலைவர் எட்வின் ஜோஸ், கவுன்சிலர் பிராங்கிளின் மற்றும் பாலப்பள்ளம் பேரூராட்சி கவுன்சிலர் வேலாண்டி, பேரூர் பா.ஜ.க. நிர்வாகிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்களிடம் செயல் அலுவலர் மற்றும் குளச்சல் சப்-இன்ஸ்பெக்டர் தேவராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமூக முடிவு ஏற்படவில்லை.
பேச்சுவார்த்தை
இதற்கிடையே குழாய் இணைப்பிற்கு தோண்டிய பள்ளத்தை மூடுவதற்கு தெற்கு பிடாகை மக்கள் முயற்சித்தனர். அப்போது தலைவர் பள்ளத்தை மூடக்கூடாது என பள்ளத்தில் அமர்ந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து போலீசார், பேரூராட்சி செயல் அலுவலர் பேச்சுவார்த்தை நடத்தியதில் ஒரு வாரம் கழித்து குளச்சல் துணை போலீஸ் சூப்பிரண்டு முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்துவது எனவும், அதில் சுமூக முடிவு எடுத்து குடிநீர் குழாய் இணைப்பு பணி செய்யலாம் எனவும், அதனால் இந்த பணியை தற்போது நிறுத்தி வைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. இதனை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர்.
உள்ளிருப்பு போராட்டம்
இதற்கிடையே பேரூராட்சி வார்டுகளில் சீரான குடிநீர் வினியோகம் செய்யக்கேட்டு கவுன்சிலர்கள் பிராங்கிளின், ஷோபா, சுசீலா, ஜெகதீஸ்வரி, ஜெயசேகர், ஜெயக்குமார், மரிய செல்வி, அனிதா, சோமன், ஆஸ்வால்டர் மற்றும் பொதுமக்கள் ரீத்தாபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதனால் பேரூராட்சி அலுவலகத்தில் பரப்பரப்பு ஏற்பட்டது.
இது குறித்து செயல் அலுவலர் சங்கர்கணேஷ் கூறியதாவது,
'ரீத்தாபுரம் பேரூராட்சி தெற்கு பிடாகையில் புதிதாக ஆழ்துளை கிணறு போடப்பட்டது. அங்கு குடிநீர் குழாயை இணைத்தால்தான், ஆலஞ்சி குடிநீர் தொட்டிக்கு குடிநீர் ஏற்ற முடியும். ஆலஞ்சி குடிநீர் தொட்டி மூலம் 9 வார்டுகள், 42 ஊர்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தவிர 1350 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பிற்கும் நீர் வினியோகிக்கப் படுகிறது. தெற்கு பிடாகை ஆழ்துளை கிணறு பிரச்சினையில் சுமூக முடிவு ஏற்பட்டு குழாய் இணைத்தால் வார்டு பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்க முடியும்' என்றார்.