4 நாட்களாக மூடப்பட்ட ரெயில்வே கேட்டால் பொதுமக்கள் அவதி
ஆம்பூர் அருகே 4 நாட்களாக ரெயில்வே கேட் மூடப்பட்டதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஆம்பூர் அருகே கீழ்முருங்கை கிராமம் அமைந்துள்ளது. இப்பகுதியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் ஆம்பூர் சர்க்கரை ஆலையும் அமைந்துள்ளது. ஏராளமான விவசாயிகள் இப்பகுதியில் உள்ளனர். இப்பகுதியில் சென்னை - பெங்களூரு ரெயில்வே பாதை செல்கிறது. இதனால் கீழ்முருங்கை பகுதியில் ரெயில்கள் வரும் போது மூடுவததற்காக ரெயில்வே கேட்டும் அமைந்துள்ளது.
இந்த நிலையில் அப்பகுதியில் ரெயில்வே தண்டவாளம் பழுது பார்த்தல் மற்றும் புதுப்பித்தல் பணிக்காக அப்பகுதியில் ரெயில்வே கேட் திடீரென மூடப்பட்டது. கடந்த 5-ந் தேதி மூடப்பட்ட ரெயில்வே கேட் இதுவரை திறக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும், விவசாயிகளும், தொழிலாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கீழ்முருங்கை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆம்பூர், குடியாத்தம் பகுதிக்கு செல்ல பல கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு ரெயில்வே கேட்டை உடனடியாக திறக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.