பிரேத பரிசோதனை அறையில் ஏற்பட்ட துர்நாற்றத்தால் வாந்தி எடுத்த பொதுமக்கள்


பிரேத பரிசோதனை அறையில் ஏற்பட்ட துர்நாற்றத்தால் வாந்தி எடுத்த பொதுமக்கள்
x

சோளிங்கர் அரசு மருத்துவமனையில் உடலை வாங்கச்சென்றபோது பிரேதபரிசோதனை அறையில் துர்நாற்றம் வீசியதால் சிலருக்கு வாந்தி ஏற்பட்டது. இதனால் டாக்டரை முற்றுகையிட்டனர்.

ராணிப்பேட்டை

சோளிங்கர் அரசு மருத்துவமனையில் உடலை வாங்கச்சென்றபோது பிரேதபரிசோதனை அறையில் துர்நாற்றம் வீசியதால் சிலருக்கு வாந்தி ஏற்பட்டது. இதனால் டாக்டரை முற்றுகையிட்டனர்.

பிரேத பரிசோதனை

சோளிங்கரை அடுத்த தாளிக்கால் பகுதியை சேர்ந்தவர் சாமுவேல் (வயது 37). ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 12-ந் தேதி இரவு வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் அவர் பெரப்பங்குளத்தில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சென்று சாமுவேல் உடலை மீட்டு பிரோத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குப் பதிவு செய்து சாமுவேல் இறப்பு குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து உடலை ஒப்படைப்பதற்காக உறவினர்களை அழைத்துள்ளனர்.

துர்நாற்றம், வாந்தி

உடலை வாங்க சாமுவேல் உறவினர்கள் சென்ற போது துர்நாற்றம் வீசியதால் அனைவருக்கும் குமட்டல் ஏற்பட்டு வாந்தி எடுத்துள்ளனர். உடல் வைக்கப்படும் பிரீசர்கள் பழுதடைந்த நிலையில் இருந்ததால் பிரேத பரிசோதனை அறையில் இருந்து துர்நாற்றம் அதிகமாக வீசியது தெரியவந்தது. ஆத்திரம் அடைந்த சாமுவேலின் உறவினர்கள் பணியில் இருந்த டாக்டரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்த தகவல் அறிந்த சோளிங்கர் போலீசார் மருத்துவமனைக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பிரீசரை சரி செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து உடலை பெற்றுக்கொண்டு சென்றனர். இதனால் மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story