கோவிலை மூடாமல் கொரோனாவை கட்டுப்படுத்தியது புதுச்சேரி மாடல் ஆட்சி; கவர்னர் பேச்சு


கோவிலை மூடாமல் கொரோனாவை கட்டுப்படுத்தியது புதுச்சேரி மாடல் ஆட்சி; கவர்னர் பேச்சு
x

கோவிலை மூடாமல் கொரோனாவை கட்டுப்படுத்தியது புதுச்சேரி மாடல் ஆட்சி என்று வேலூரில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.

வேலூர்

கோவிலை மூடாமல் கொரோனாவை கட்டுப்படுத்தியது புதுச்சேரி மாடல் ஆட்சி என்று வேலூரில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.

பாலாறு பெருவிழா

வேலூரை அடுத்த ஸ்ரீபுரம் நாராயணி மஹாலில் அகில பாரதீய சன்னியாசிகள் சங்கம், ஸ்ரீபுரம் நாராயணி பீடம் ஆகியவை சார்பில் பாலாறு பெருவிழா நடந்து வருகிறது. நேற்று 3-வது நாள் பெண் துறவிகள் மாநாடு நடைபெற்றது. இதில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார். பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த பெண்களுக்கு விருதுகளை வழங்கி அவர் பேசியதாவது:-

காவி இருக்கும் இடம்

காவி இருக்கும் இடத்தில் அன்பு, அதிகாரம், பலம் அனைத்தும் இருக்கும். அனைத்து மதங்களையும் மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். ஆன்மிகம் இல்லாமல் தமிழகம் இல்லை. ஆண்டாள் கற்றுக்கொடுத்த தமிழ்தான் இன்று அனைவரது நாவிலும் தவழ்ந்து கொண்டிருக்கிறது. ஆழ்வார்கள் இல்லாமல் தமிழ் இல்லை.

ஆன்மிகமும் காவியும் சேர்ந்ததுதான் தமிழகம். ஆனால் தமிழகத்தில் காவிக்கு சம்பந்தமில்லை என்ற நிலையை உருவாக்க சில சக்திகள் செயல்பட நினைத்தனர். கொரோனா காலத்தில் புதுச்சேரி மாநிலத்தில் ஒரு கோவில் கூட மூடப்படவில்லை. திறந்த வழிபாட்டோடு தான் கொரோனாவை கட்டுப்படுத்தினோம். இதனை புதுச்சேரி மாடல் என்று கூட சொல்லலாம். அனைத்து மதத்தினரும் இறைவனை கும்பிட வேண்டும். ஒரு மதம் பற்றி மற்றொரு மதத்தினர் விமர்சிக்க கூடாது.

நான் நேரம் கிடைக்கும்போது எல்லாம் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு போவதுண்டு. இன்னும் சொல்லப்போனால் நடராஜர் இயங்கிக் கொண்டிருப்பதனால் தான் இந்த உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது என்று அஞ்ஞானமும், சொல்கிறது. மெய்ஞானமும் சொல்கிறது. விஞ்ஞானமும் அதை தான் சொல்கிறது.

நடராஜரை மோசமாக விமர்சிக்க முடியும் என்றால் அதுதான் சுதந்திரம் என்றால் அது சுதந்திரம் இல்லை. அனைவருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும் என்ற பரந்த மனப்பான்மையை தான் அனைத்து மதமும் சொல்லிக் கொடுக்கிறது.

தீபாவளிக்கு வாழ்த்து

இந்து மதமும் அதைத்தான் சொல்லிக் கொடுக்கிறது. சகிப்புத்தன்மை இருக்கிறது என்பதற்காக சகிக்க முடியாத வார்த்தைகளை கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதனால் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் கொடுக்கும் மரியாதையை பிறருக்கும் கொடுக்க வேண்டும்.

எனக்கு பக்கத்து வீட்டில் ஒருவர் இருக்கிறார். அவர் தன்னை மதச்சார்பின்மையாளர் என்று கூறுவார். ஆனால் அவர், கிறிஸ்துமஸ்க்கு வாழ்த்து சொல்லுவார். ரம்ஜானுக்கு வாழ்த்து சொல்லுவார். ஆனால் தீபாளிக்கு மட்டும் வாழ்த்து சொல்ல மாட்டார். அவரை ஆதரித்தாலும் வாழ்த்து சொல்லமாட்டார். ஏன் என்று கேட்டேன், தமிழகத்தில் தானே இருக்கிறீர்கள். எந்தமதமும் சம்மதம் என்று கூறுகிறீர்களே, அதில் தான் இந்து மதமும் வருகிறது. ஏன்? வாழ்த்து சொல்லவில்லை என்று கேட்டேன். இதுவரை பதில் இல்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் கவர்னர்கள் செயல்பாடு குறித்து நிருபர்கள் கேட்டபோது, அதற்கு தமிழிசை சவுந்தர்ராஜன் அளித்த பேட்டியில், அனைத்து மாநிலங்களிலும் கவர்னர்கள் தன்னிச்சையாக செயல்படவில்லை. அவர்கள் மீது குற்றம் சாட்டப்படுகிறது. அந்தந்த மாநில அதிகாரத்துக்கு உட்பட்டு சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படுகிறார்கள். நானும் அவ்வாறு தான் செயல்படுகிறேன். மற்ற மாநில கவர்னர்களும் அப்படித்தான் செயல்படுகிறார்கள் என்றார்.

நிகழ்ச்சியில் ஸ்ரீபுரம் நாராயணி பீட மேலாளர் சம்பத், வள்ளிமலை ஆதினம் உள்பட பல்வேறு ஆதினங்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்


Next Story