கோத்தகிரியில் மலைக்காய்கறிகள் கொள்முதல் விலை கடும் வீழ்ச்சி-விவசாயிகள் கவலை


கோத்தகிரியில் மலைக்காய்கறிகள் கொள்முதல் விலை கடும் வீழ்ச்சி-விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 18 Feb 2023 12:15 AM IST (Updated: 18 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

காய்கறி மண்டிகளுக்கு மலை காய்கறிகள் வரத்து அதிகரித்துள்ளதால், காய்கறிகளின் கொள்முதல் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நீலகிரி

கோத்தகிரி

காய்கறி மண்டிகளுக்கு மலை காய்கறிகள் வரத்து அதிகரித்துள்ளதால், காய்கறிகளின் கொள்முதல் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

காய்கறி சாகுபடி

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஏராளமான விவசாயிகள் காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். தொழிலாளர் பற்றாக்குறை, விதை மற்றும் இடுபொருட்கள் மற்றும் உரங்களின் விலை ஏற்றம், வன விலங்குகளின் தொல்லை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வங்கி கடன் பெற்று விவசாயிகள் காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர்.

வழக்கமாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் பனிப்பொழிவு அதிகம் இருக்கும் என்பதால் விவசாயிகள் தங்களது விளைநிலங்களை தரிசாக வைத்திருந்து, ஜனவரி மாதம் முதல் விவசாயத்தை தொடங்குவது வழக்கம். ஆனால் நடப்பாண்டில் கடந்த 2 மாதங்களாக கோத்தகிரி பகுதியில் உறைபனியின் தாக்கம் இல்லாததாலும், போதுமான மழை பெய்ததாலும் தங்களது தோட்டங்களில் தொடர்ந்து மலை காய்கறிகளைப் பயிரிட்டு வந்தனர்.

மேலும் காய்கறிகளுக்கு போதுமான கொள்முதல் விலையும் கிடைத்து வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை காய்கறி மண்டிகளில் மலை காய்கறிகளின் கொள்முதல் விலை நிலையாக இருந்து வந்தது. மேலும் கேரட், பீட்ரூட் ஆகியவை கிலோவுக்கு சராசரியாக 40 முதல் 60 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது.

வரத்து அதிகரிப்பால் விலை குறைந்தது

ஆனால் தற்போது காய்கறி மண்டிகளுக்கு மலை காய்கறிகளின் வரத்து வெகுவாக அதிகரித்துள்ளதால் அவற்றின் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. தற்போது மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளில் கேரட், பீட்ரூட், முள்ளங்கி ஆகியவை கிலோவுக்கு 15 ரூபாய் முதல் 25 ரூபாய்க்கும், ஊட்டி உருளைக்கிழங்கு கிலோ 40 ரூபாய்க்கும், முட்டை கோஸ் கிலோ வெறும் 5 ரூபாய்க்கும், காலி பிளவர் கிலோ 40 ரூபாய்க்கும், நூர்கோல் 40 ரூபாய்க்கும், டர்னிப் 30 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கொள் முதல் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளதால், அதைப் பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு அசல் தொகை கூட கிடைக்காமல், பெரும் நஷ்டம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் கவலையடைந்துள்ளனர். ஆனால் மற்ற காய்கறிகளான பட்டாணி கிலோவுக்கு 80 ரூபாய் முதல் 100 ரூபாய்க்கும், அவரை கிலோ 100 ரூபாய் முதல் 120 ரூபாய்க்கும், டபுள் பீன்ஸ் 60 ரூபாய் முதல் 70 ரூபாய்க்கும், பீன்ஸ் சராசரியாக கிலோ 70 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யபட்டு வருகிறது.

இதுகுறித்து கோத்தகிரி பகுதியைச் சேர்ந்த கேரட் பயிரிட்டுள்ள விவசாயி ஒருவர் தெரிவிக்கையில், பிப்ரவரி மாதத்தில் முதல் போக சாகுபடி மேற்கொள்வது வழக்கம். ஆனால் நடப்பாண்டில் எதிர்பார்த்த அளவு பனிப்பொழிவின் தாக்கம் இல்லாததால் பெரும்பாலான விவசாயிகள் தொடர்ந்து காய்கறிகளை பயிரிட்டு வந்தனர். எனவே மண்டிகளுக்கு வரத்து அதிகரித்ததால் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் வங்கிகளில் கடன் பெற்று விவசாயம் செய்து வருகிறோம். விலை வீழ்ச்சியால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுவதால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.


Next Story