ஆரல்வாய்மொழியில் கோழியை விழுங்கிய மலைப்பாம்பு; குரைத்த நாயையும் இறுக்கி கொன்றது
ஆரல்வாய்மொழியில் கோழியை விழுங்கிய மலைப்பாம்பு, தடுக்க வந்த நாயையும் இறுக்கி கொன்றது.
ஆரல்வாய்மொழி,
ஆரல்வாய்மொழியில் கோழியை விழுங்கிய மலைப்பாம்பு, தடுக்க வந்த நாயையும் இறுக்கி கொன்றது.
நாயை இறுக்கிய பாம்பு
ஆரல்வாய்மொழி கணேசபுரத்தை சேர்ந்தவர் சுடலை (வயது 45). கொத்தனார். இவர் வீட்டில் கோழிகள் மற்றும் நாய் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு அவர் வீட்டு பின்புறத்தில் இருந்து கோழிகளின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. அதனை அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
ஆனால் நாயின் சத்தம் தொடர்ந்து கேட்டது. இதனால் சுடலை வீட்டின் வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது ஒரு மரத்தின் கீழ் மலைப்பாம்பு ஒன்று நாயின் உடலை சுற்றி இறுக்கிக் கொண்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டு மீட்க முயன்றார்.
இறந்த நிலையில் மீட்பு
உடனே அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் வனக் காப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, வேட்டை தடுப்பு காவலர் ஜெகன் ஆகியோர் விரைந்து வந்து மலைப்பாம்பிடம் சிக்கிய நாயை மீட்க முயற்சி மேற்கொண்டனர். இருப்பினும் நாய் இறந்த நிலையில் தான் மீட்கப்பட்டது.
முதலில் மலைப்பாம்பு கோழியை விழுங்கியுள்ளது. இதனை தடுக்க நாய் குரைத்த போது தான் அந்த நாயையும் மலைப்பாம்பு இறுக்கி கொன்றுள்ளது தெரியவந்தது. பிடிபட்ட மலைப்பாம்பு 15 அடி நீளம் இருந்தது.
பின்னர் அந்த மலைப்பாம்பு அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது.