வினாக்கள் சற்று கடினமாக இருந்தது


வினாக்கள் சற்று கடினமாக இருந்ததாக நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

விருதுநகர்


வினாக்கள் சற்று கடினமாக இருந்ததாக நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வினாக்கள் கடினம்

நீட் தேர்வு குறித்து தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் கூறியதாவது:-

அருப்புக்கோட்டையை சேர்ந்த மாணவி திவ்யபாரதி:-

நான் தனியார் பயிற்சி மையத்தில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்றேன். நீட் தேர்வினை திருத்தங்கல் தேர்வு மையத்தில் எழுதினேன். உயிரியல் வினாக்கள் எளிதாக இருந்தன. வேதியியல் மற்றும் இயற்பியல் வினாக்கள் கொஞ்சம் கடினமாகவே இருந்தது.

ஆனாலும் மொத்தத்தில் நன்றாக தேர்வு எழுதி உள்ளேன். அதிக மதிப்பெண்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றேன்.

நேரம் போதாது

ராஜபாளையத்தை சேர்ந்த மாணவர் அரவிந்த் (நீட் தேர்வு மாணவர் ராஜபாளையம்)

நான் ஆர்.ஆர்.நகர் தேர்வு மையத்தில் நீட் தேர்வு எழுதினேன். தனியார் பயிற்சி மையத்தில் பயின்றதால் பயிற்சியின் போது வினாக்களை வாசித்து விடை எழுதும் அளவிற்கு பயிற்சி பெற்றிருந்தேன். ஆனால் உயிரியலில் வினாக்களுக்கு விடையும் கொடுக்கப்பட்டு எது சரி எது தவறு என்று கேட்கப்பட்டிருந்தது.

இதனால் சிரமமாக இருந்தது. வேதியியலும், இயற்பியலும் ஓரளவு எளிதாகவே இருந்தது. இருப்பினும் தேர்வு எழுத 3 மணி நேரம் வழங்கப்பட்டிருந்த போதிலும் நேரம் போதவில்லை. ஒவ்வொரு பாடத்திலும் 45 வினாக்களுக்கு பதிலளிக்க வேண்டிய நிலையில் முழுமையாக பதில் அளிக்க முடியாத நிலை இருந்தது. நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும் என நம்புகிறேன்.

நம்பிக்கை

விருதுநகரை சேர்ந்த மாணவர் ஹரிஹரன்:-

நான் விருதுநகர் சூலக்கரையில் உள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுதினேன். நான் படித்த பள்ளியிலேயே நீட் தேர்வுக்கான பயிற்சி பெற்றேன். உயிரியல் கேள்விகள் எளிதாக இருந்தன. வேதியியல் மற்றும் இயற்பியல் கேள்விகள் சற்று கடினமாகவே இருந்தது. அனைத்து வினாக்களுக்கும் பதில் அளிப்பதற்கு நேரம் போதுமானதாக இருந்தது. நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மொத்தத்தில் ஒரு சில வினாக்கள் சற்று கடினமாக இருந்ததாக மாணவ-மாணவிகள் கருத்து தெரிவித்தனர்.


Related Tags :
Next Story