2-வது நாளாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்ததால் 2-வது நாளாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் மழை காணப்பட்டது. இரவிலும் மழை பெய்தது. அதே போல கடும் குளிர் காணப்பட்டது.
இதனிடையே நேற்று காலை முதல் லேசான சாரல் மழை பெய்தது. கிருஷ்ணகிரி, ஓசூர் சுற்று வட்டார பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் மாவட்டம் முழுவதும் 2-வது நாளாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்தநிலையில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- கிருஷ்ணகிரி 33.10, நெடுங்கல் 28.60, கே.ஆர்.பி. அணை -26.80, ராயக்கோட்டை 26, பாரூர் 24, ஊத்தங்கரை 19, பாம்பாறு அணை 18, போச்சம்பள்ளி 18, பெனுகொண்டாபுரம் 15.20, சின்னாறு அணை 15, தேன்கனிக்கோட்டை 14, சூளகிரி 12, அஞ்செட்டி 10.40, தளி 10, ஓசூர் 4, கெலவரப்பள்ளி அணை 3 என மொத்தம் 277.10 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.