கோடைவெயிலின் வெப்பத்தை விரட்டிய மழை
திண்டுக்கல்லில், கோடை வெயிலின் வெப்பத்தை விரட்டும் வகையில் மழை பெய்தது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கோடைகாலம் தொடங்கும் முன்பே வெயில் மக்களை வாட்டி வதைக்க தொடங்கி விட்டது. பகலில் வாகனங்களில் கூட செல்ல முடியாத அளவுக்கு வெப்பம் காணப்பட்டது. இதனால் பகலில் மக்கள் வியர்வை குளியலில் நனைந்தபடி பயணிக்கும் நிலை ஏற்பட்டது. இந்த வெப்பத்தை தணிக்க கோடை மழை பெய்யாதா? என மக்கள் ஏங்கி தவித்தனர். இதற்கிடையே கொடைக்கானல், பழனி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. ஆனால் திண்டுக்கல் நகரில் மழை துளிகள் விழுவதற்கு தயங்கின. ஒருசில நாட்களில் கருமேகங்கள் சூழ்ந்த போதும், ஓரிரு துளிகள் மட்டுமே விழுந்தன. இது மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.
இந்த நிலையில் நேற்றும் பகலில் கடுமையான வெயில் கொளுத்தியது. மக்கள் வழக்கம் போல் வெப்பத்தில் வேதனையோடு நடமாடினர். இதற்கிடையே மாலையில் வானில் கருமேக கூட்டங்கள் திரண்டன. இதையடுத்து மாலை 6 மணிக்கு சாரல் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் அதுவே பலத்த மழையாக மாறியது. சுமார் 30 நிமிடங்கள் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும் வேடப்பட்டி ஒத்தக்கண் பாலம், நாகல்நகர், ரவுண்டுரோடு, தாடிக்கொம்பு சாலை, நேருஜிநகர் ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் சென்றனர். அதேநேரம் பகலில் கோடை வெயிலின் வெப்பத்தை மாலை நேர மழை விரட்டியதால், இரவில் இதமான குளிர் நிலவியது.