ராணி கண்ணாடி மாளிகையை புதுப்பித்து சுற்றுலா தலமாக்க வேண்டும்
ஆரணி அருகே ராணி கண்ணாடி மாளிகையை புதுப்பித்து சுற்றுலா தலமாக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஆரணி
ஆரணி அருகே ராணி கண்ணாடி மாளிகையை புதுப்பித்து சுற்றுலா தலமாக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பிரான்ஸ் அழகி
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரத்தை தலைமையிடமாக கொண்டு ஜாகீர்தார் என்ற மன்னர் ஆட்சி செய்து வந்தார்.
கி.பி.18-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆற்காடு நவாப்பின் கீழும் ஜாகீர்தாரர்கள் ஆட்சி செய்தனர்.ஜாகீர்தார் மன்னர் சத்திய விஜயநகரில் அழகிய செந்நிற செங்கல்லால் ஆன ஒரு அரண்மனையை கட்டினார்.
அங்கு சிறப்பாக ஆட்சி செய்து வந்தார். இந்த நிலையில் ஜாகீர்தார் மன்னர் கடல் மார்க்கமாக பிரான்சுக்கு பயணித்தபோது, அங்கு ஒரு பேரழகியை பார்த்து அவள் அழகில் மயங்கி, அந்த அழகியை கடல் மார்க்கமாக இந்தியாவில் உள்ள ஆரணி விஜயநகரத்துக்கு அழைத்து வந்து ரகசியமாக வைத்தார்.
ஒரு நாள் அந்த பிரான்ஸ் அழகி மாறுவேடம் அணிந்து ஜாகீர்தார் ஆண்ட விஜயநகரை பார்வையிட ஆசைப்பட்டு சென்றார்.
கண்ணாடி மாளிகை
அப்போது ஜாகீர்தார் மன்னன் முதல் மனைவியோடு வாழ்ந்து வரும் அரண்மனையை பார்த்து பிரமித்து அதேபோல ஒரு அரண்மனையை கட்டி அதில் என்னை வாழ வையுங்கள் என ஜாகீர்தாரிடம் கூறியுள்ளார்.
அதையேற்று இன்று எஸ்.வி. நகரத்தில் உள்ளதை போல பூசிமலைக்குப்பம் நடுகாட்டில் முதல் மனைவிக்கு கட்டிய அரண்மனைப்போல் அழகிய செந்நிற அரண்மனையை கட்டினார்.
அது மூன்று அடுக்கு கொண்ட மாடிகளாக இருந்தது. மாடிகளுக்கு செல்ல 3 இடங்களில் படிகள் அமைக்கப்பட்டன.
ேமலும் அதில் ரகசிய படிகள் வழியாக விஜயநகரம் அமைந்துள்ள ஆரணி அரண்மனைக்கும், பூசிமலைக் குப்பம் காட்டில் கட்டப்பட்ட அரண்மனைக்கும் ரகசிய சுரங்கப்பாதை வழியாக சென்று பிரான்ஸ் காதலியை சந்தித்து வந்ததாக வரலாறு கூறுகிறது.
மேலும் இந்த அரண்மனையை கண்ணாடி மாளிகை என்றும் அழைப்பர்.
சிதிலமடைந்துள்ளது
வரலாற்று சிறப்பு மிக்க இந்த 2 அரண்மனைகளும் சிதிலமடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
ஆரணியில் உள்ள அரண்மனை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டரால் பார்வையிடப்பட்டு பழுதுபார்த்து வந்த நிலையில், காட்டில் கட்டப்பட்ட அரண்மனை மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது.
அழகிய தோற்றத்துடன் காணப்படும் அரண்மனை இன்று பொலிவிழந்து காணப்படுகிறது. தற்போது அந்த அரண்மனைக்கென்று 60 ஏக்கர் நிலம் உள்ளது.
அதோடு அரண்மனை மற்றும் அதை சுற்றி உள்ள 5 ஏக்கர் நிலம் புதர்மண்டி பயன்பாடு இல்லாமல் உள்ளது.
ஊராட்சி கட்டுப்பாட்டின் மூலம் 100 நாள் வேலை திட்டத்தினால் அவ்வப்போது அரண்மனையை சுத்தம் செய்து வருகிறார்கள். இருப்பினும் வரும் ஆண்டுகளில் இந்த அழகிய 2 அரண்மனைகளும் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
சுற்றுலா தலம்
வரலாற்றில் காதல் சின்னங்களான இந்த அரண்மனைகளை புனரமைத்து சுற்றுலா தலங்களாக மாற்ற வேண்டும் என்பது அப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
இதுகுறித்து ஓய்வு பெற்ற வரலாற்று ஆசிரியர் விஜயன் கூறுகையில், காதல் மனைவிக்காக கட்டிய அரண்மனை (கண்ணாடி) மாளிகையை அரசு சீரமைத்து பொதுமக்கள் பார்வைக்காகவும், சுற்றுலாத்தலமாகவும் மாற்றி அமைக்க வேண்டும் என தெரிவித்தார்.
சமூக ஆர்வலர் குப்புசாமி கூறுகையில், இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் அமைக்கப்பட்ட கண்ணாடி மாளிகை அரண்மனையை சீரமைக்க வேண்டும்.
மேலும் இதனை பொதுமக்கள் பார்வைக்காக சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்டால் வருவாய் கிடைக்கும் என கூறினார்.