குமரியில் சிறுமியை பலாத்காரம் செய்த சித்தப்பா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
குமரியில் 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்த சித்தப்பா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
நாகர்கோவில்:
குமரியில் 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்த சித்தப்பா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
15 வயது சிறுமி
நாகர்கோவில் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 58 வயதுடைய தொழிலாளி ஒருவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய வீட்டின் அருகே இவருடைய அண்ணனும் குடும்பத்துடன் தங்கி உள்ளார். அண்ணனின் மகள் பத்தாம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த மாதம் சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் அவரை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிறுமியை டாக்டா்கள் பரிசோதித்தபோது, 7 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது.
இதுபற்றி சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் மகளிர் போலீசார் விரைந்து வந்து சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.
பாலியல் பலாத்காரம்
அப்போது 7 மாதங்களுக்கு முன்பு சிறுமி வீட்டுக்கு தொழிலாளியான சித்தப்பா வந்ததாகவும், வீட்டில் யாரும் இல்லாததால் அவரை வெளியே அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
இதனால் சிறுமி வெளியே சொல்லாமல் இருந்து வந்துள்ளார். அதையே தனக்கு சாதகமாக்கி கொண்ட சித்தப்பா, சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி தகவல் வெளியானது.
குண்டர் சட்டத்தில் கைது
அதைத்தொடர்ந்து சிறுமியின் சித்தப்பாவான தொழிலாளி மீது நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து கைது செய்தார். மேலும் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு போலீசார் பரிந்துரை செய்தனர்.
இந்தநிலையில் சித்தப்பாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டார். இதையடுத்து நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து நேற்று பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.
--