ரேஷன் கடைக்கு சொந்த கட்டிடம் வேண்டும்


ரேஷன் கடைக்கு சொந்த கட்டிடம் வேண்டும்
x

ரேஷன் கடைக்கு சொந்தமாக கட்டிடம் கட்ட நிதி ஒதுக்க கோரி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

பெரம்பலூர்

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது குன்னம் தாலுகா, மழவராயநல்லூர் கிராம பொதுமக்களில் சிலர் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்களில் சிலர் சென்று கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். அதில், எங்கள் கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை கோவில் சாவடியில் தற்காலிகமாக இயங்கி வருகிறது. ரேஷன் கடைக்கு சொந்த கட்டிடம் கட்ட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு பலமுறை மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

பள்ளிக்கு சுற்றுச்சுவர் வேண்டும்

எனவே தற்போது கோவில் சாவடியின் அருகே உள்ள பொது இடத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரேஷன் கடைக்கு சொந்த கட்டிடம் கட்ட நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான முன் வைப்பு தொகையை எங்கள் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் செலுத்த தயாராக உள்ளனர். மேலும் எங்கள் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தை தேர் திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த பயன்படுத்தி வருகிறோம்.

தற்போது ஒரு தரப்பினர் அந்த நிலத்தில் பால் பண்ணைக்கு கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது. மற்றொரு தரப்பினர் வண்டிப்பாதைக்கு பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதனால் இரு தரப்பினரும் மோதி கொள்ளும் சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே அந்த நிலத்தை கிராம பொது இடமாக அறிவிக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

வேலை வழங்க கோரிக்கை

பெரம்பலூா் தாலுகா, செங்குணம் கிராம ஊராட்சியை சேர்ந்த 100 நாள் தொழிலாளர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், எங்கள் கிராம ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் (100 நாள் வேலை) தொழிலாளர்களுக்கு மாதம் 6 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படுகிறது. அதிலும் அரசு விடுமுறை நாட்கள் வந்து விட்டால் 6 நாட்களுக்கு குறைவாக வேலை கிடைக்கிறது. இதனால் தொழிலாளர்கள் வேலை இல்லாமல் வீட்டிலேயே இருக்கின்ற நிலைமை ஏற்படுகிறது. எனவே மாதத்திற்கு 14 நாட்கள் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

213 மனுக்கள்

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 213 மனுக்களை கலெக்டர் கற்பகம் பெற்றார். முன்னதாக கலெக்டர் தோட்டக்கலை துறையின் சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்கம் திட்டத்தின் கீழ் 7 விவசாயிகளுக்கு பவர் டில்லர் மற்றும் பவர் வீடர் ஆகிய பண்ணை எந்திரங்களை ரூ.3.80 லட்சம் மானியத்தில் வழங்கினார்.

மேலும் அவர் கடந்த வாரம் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின் போது முதியோர் உதவி தொகை கேட்டு மனு கொடுத்த குன்னம் தாலுகா, ஓலைப்பாடி கிராமத்தை சேர்ந்த மருதாயி என்பவருக்கும், ஆதரவற்ற விதவை உதவித்தொகை கேட்டு மனு கொடுத்த ஆலத்தூர் தாலுகாவை சேர்ந்த அழகி என்பவருக்கும் நேற்று நடந்த கூட்டத்தில் உதவி தொகைக்கான ஆணைகளை வழங்கினர். மனுக்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுத்த சம்பந்தப்பட்ட தாசில்தார்களையும் கலெக்டர் பாராட்டினார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லலிதா, வேளாண்மை இணை இயக்குனர் சங்கர் நாராயணன், தோட்டக்கலை துணை இயக்குனர் இந்திரா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சரவணன் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story