மத்திய 'பட்ஜெட்டில்'இறக்குமதி வரி அதிகரிப்புதங்கம் விலை உயர்வுக்கு காரணமா?வியாபாரிகள், இல்லத்தரசிகள் கருத்து


மத்திய பட்ஜெட்டில்இறக்குமதி வரி அதிகரிப்புதங்கம் விலை உயர்வுக்கு காரணமா?வியாபாரிகள், இல்லத்தரசிகள் கருத்து
x
தினத்தந்தி 6 Feb 2023 12:15 AM IST (Updated: 6 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மத்திய ‘பட்ஜெட்டில்'இறக்குமதி வரி அதிகரிப்பு தங்கம் விலை உயர்வுக்கு காரணமா? என்று வியாபாரிகள், இல்லத்தரசிகள் தொிவித்த கருத்துக்கள்.

கடலூர்



1920-ம் ஆண்டில் ரூ.21-க்கு விற்பனையான ஒரு பவுன் தங்கம் இன்று ரூ.44 ஆயிரத்தை கடந்துள்ளது. 103 ஆண்டுகளில் 2 ஆயிரத்து 96 மடங்கு விலையேறி இருக்கிறது.

திருமணம், கோவில் கொடைகள் மற்றும் விசேஷ நிகழ்வுகளில் தங்க நகைகள் அணிவதை பலரும் கவுரமாக கருதுவதால் அதன் மீதான மோகம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் அதன் விலை தொடர்ந்து உயர்வை கண்டாலும் மவுசு மட்டும் குறைவது இல்லை. ஒவ்வொரு ஆண்டும் தங்கம் விலை புதிய உச்சம் தொட்டு வரலாற்றில் இடம் பிடித்து வருகிறது.

பதுக்கல்

இந்த சூழலில் மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி உயர்வு அறிவிப்பு வெளியான உடனேயே உள்நாட்டில் தங்கத்தை மொத்த வியாபாரிகள் அதிகளவில் பதுக்கி இருக்கலாம் என்று பரபரப்பு வெளியாகி உள்ளது. இதன் எதிரொலியாக தங்கம் விலை எகிறியுள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு பவுன் தங்கம் ரூ.50 ஆயிரத்தை கடப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி இல்லத்தரசிகளை கதிகலங்க செய்துள்ளது.

தங்கம் விலை 'ராக்கெட்' வேகத்தில் உயர்ந்து வரும் வேளையில் வியாபாரிகள், இல்லத்தரசிகள் அது பற்றி தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

கடத்தலுக்கு வழிவகுக்கும்

தமிழ்நாடு தங்க நகை வியாபாரிகள் கூட்டமைப்பின் முக்கிய ஆலோசகர் எல்.கே.எஸ். சையது அகமது:-

பெண்கள் தங்க ஆபரணங்கள் அணிவது பாரம்பரிய கலாசாரமாக தொன்று தொட்டு இருந்து வருகிறது. உள்நாட்டில் தங்க உற்பத்தி இல்லை என்றாலும் வெளிநாட்டில் இருந்து ஆண்டுக்கு தோராயமாக 600 டன் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்கான இறக்குமதி சுங்க வரியை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கைகள் விடுத்து வந்தோம். ஆனால் மத்திய பட்ஜெட்டில் இறக்குமதி வரியை குறைப்பதற்கு பதிலாக உயர்த்தி இருப்பது வேதனைக்குரியது. தங்கம் விலை அதிகரிப்பு சட்டவிரோத கடத்தலுக்கு வழிவகுத்து விடும்.

தற்போது தங்க நகை உயர்வு திருமண வீட்டாரை கஷ்டத்திலும், கவலையிலும் ஆழ்த்தி உள்ளது. எனவே மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட தங்கத்தின் மீதான இறக்குமதி வரி உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும். எங்கள் கோரிக்கையை ஏற்று வரியை குறைக்க வேண்டும். இந்த கோரிக்கையை நிறைவேற்றினால் தமிழ்நாட்டு பெண்களின் அன்பும், ஆதரவும் அவருக்கு கிடைக்கும்.

விரைவில் ரூ.50 ஆயிரம்

மெட்ராஸ் வைரம், தங்கம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஷலானி:-

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, பண வீக்கம் அதிகரிப்பு போன்ற காரணங்களால் பங்குச்சந்தை வீழ்ச்சியை சந்தித்து வருவதால், உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பார்வை தங்கத்தின் மீது திரும்பி உள்ளது. இதனால் தங்கத்தின் மீதான முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக தங்கம் விலை ஏறுமுகத்தில் செல்ல தொடங்கி உள்ளது. தொலைநோக்கு அடிப்படையில் பார்த்தால் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் தொடர்ந்து அபரிமிதமான உயர்வு இருக்கும். இந்த மாத இறுதிக்குள் ஒரு பவுன் தங்கம் ரூ.45 ஆயிரத்தை கடந்துவிட வாய்ப்பு உள்ளது. படிப்படியாக அதிகரித்து ஒரு பவுன் ரூ.50 ஆயிரத்தை நெருங்குவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. தற்போதைய சூழலில் தங்கம்-வெள்ளி விலை ஏற்றத்தில் தான் இருக்கும். பெரிய அளவில் இறங்குமுகத்தில் இருக்காது.

எட்டாக்கனி

கடலூரை சேர்ந்த சிவாஜிகணேசன்:-

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் சாமானிய மக்களுக்கு தங்கம் எட்டாக்கனியாகவே உள்ளது. தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் செல்வதை பார்த்தால் பெண் பிள்ளைகளுக்கு சீதனமாக இனி தங்க நகைகளை வழங்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தான் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால் பணக்காரர்கள் தங்கத்தில் முதலீடு செய்து, அதில் லாபம் அடைகிறார்கள். சிலர் தங்கத்தை அதிக அளவில் பதுக்கி வைப்பதாலும், விலை உயர்வு காரணமாக இருக்கிறது. இது போன்ற நிலையை தவிர்க்க வேண்டும்.

வருத்தம்

கொம்பாடிக்குப்பம் இல்லத்தரசி சங்கீதா:-

நாடு முழுவதும் தங்கத்தின் மதிப்பு வெகுவாக அதிகரித்தாலும் தங்கத்தின் மீது உள்ள நாட்டம் மனிதர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு குறைவதில்லை. எனினும் தங்கம் விலை உயர்வு காரணமாக ஏழை, எளிய மக்களால் தங்கத்தை நினைத்துக் கூட பார்க்க முடியாத நிலை உள்ளது.

தங்கம் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து விட்டது. இருப்பினும் பொதுமக்கள் தன்னுடைய அடிப்படை தேவைக்கும், ஆடம்பரத்திற்கும் பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் இருந்தாலும் திருமணம், காதணி விழா, மஞ்சள் நீராட்டு விழா, புதுமனை புகுவிழா போன்ற நிகழ்வுகளுக்கு பயன்படுத்துவது இன்றைய கால கட்டாயத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.

ஒரு பொருளின் தேவை அதிகரிக்கும் போது, அதன் மதிப்பு வெகுவாக அதிகரிக்கிறது. தங்கத்தின் விலை ஒரு பங்கு குறைந்து உள்ளது என சாமானிய மக்கள் நினைத்து பெருமூச்சு விடுவதற்குள், 3 மடங்கு விலை உயர்கிறது. இத்தகைய மாற்றம் பொதுமக்களிடையே பெரும் வருத்தத்தை அளிக்கிறது. ஆகவே தங்கத்தின் விலையை குறைத்தால், ஏழை, எளிய மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.

முன்பேர வர்த்தகம்

விருத்தாசலத்தை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் சுரேஷ்சந்த்:- அமெரிக்காவின் வேலையில்லா திண்டாட்டத்தினால் தங்கத்தின் விலை உயர்ந்து விட்டது. ஆனால் நிலையில்லா தன்மையினால் மீண்டும் விலை குறைந்து விட்டது. அடுத்ததாக முன் பேர வர்த்தகத்தின் காரணமாக தங்கத்தின் விலையில் ஏற்றம், இறக்கம் வருகிறது. இது போன்ற உலக அளவில் நடைபெறும் முன் பேர வர்த்தக சூதாட்டத் தால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இது உலக அளவில் கவனிக்க வேண்டிய விஷயமாகும்.

மத்திய பட் ஜெட்டிற்கும், தங்கம் விலை ஏற்றத்திற்கும் சம்பந்தமே இல்லை. முன் பேர வர்த்தகத்தில் நடைபெறும் இந்த தவறான செயலை தடுக்க வேண்டும். மக்கள் தங்கத்தை சேமிப்பது அவர்களுக்கு பிற்காலத்தில் உறு துணை யாக இருக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் மற்றும் மக்களுக்கு இக்கட்டான சூழ்நிலைகள் வரும் போது, சேமித்து வைத்த தங்கம் அவர்களுக்கு கைகொடுக்கும்.

தாறுமாறாக உயர்வு

காட்டுமன்னார்கோவில் வடக்கு கொளக்குடியை சேர்ந்த இல்லத்தரசி ராஜேஸ்வரி:-

எனக்கு 3 மகள்கள் உள்ளனர். கூலி வேலை செய்து வரும் எனது கணவர் வருமானத்தில் அவர்களை கல்லூரி வரை படிக்க வைத்து விட்டேன். அதில் 2 மகள்களை திருமணம் செய்து கொடுத்துள்ளேன். 3-வது மகள் கல்லூரி படித்து வருகிறார். ஏற்கனவே 2 மகள்களை திருமணம் செய்து கொடுக்கும் போது, விலை வாசி குறைந்து இருந்தது. ஆனால் இப்போது விலைவாசி உயர்ந்து விட்டது. குறிப்பாக தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து விட்டது.

இதை நினைத்தாலே எங்களுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. மேலும் அரசும் திருமண உதவி திட்டத்தை நிறுத்தி விட்டது. இது மேலும் எங்களை பாதித்துள்ளது. இந்த விலை இன்னும் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். இதை எப்படி சமாளிக்க போகிறோம் என்று தெரியவில்லை. ஆகவே உடனடியாக அரசு தங்கத்தின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிச்சாவரம் படகு ஓட்டும் தொழிலாளி ராஜா:-

தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.5 ஆயிரத்தை தொட்டுள்ளது. இப்படி நாளுக்கு நாள் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே போனால் எங்களை போல் தினக்கூலி தொழிலாளர்கள் என்ன செய்ய முடியும். ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் திருமணத்திற்கு தங்கம் வாங்குவது சாத்தியமில்லாமல் போய் விடும். தங்கம் விலை உயர்வால் ஏழை, எளிய குடும்பத்தில் உள்ள இளம்பெண்கள் திருமணம் ஆகாமல் முதிர்கன்னிகளாக மாறவும் வாய்ப்பு உள்ளது. இது போன்ற நிலையை தடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story