மக்களை தேடி வரும் வகையில் ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது
தமிழகத்தில் தற்போது எல்லா திட்டங்களும் மக்களை தேடி வரும் வகையில் ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது என்று விவசாயிகள் மாநாட்டில் சி.என்.அண்ணாதுரை எம்.பி. பேசினார்.
திருவண்ணாமலை
தமிழகத்தில் தற்போது எல்லா திட்டங்களும் மக்களை தேடி வரும் வகையில் ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது என்று விவசாயிகள் மாநாட்டில் சி.என்.அண்ணாதுரை எம்.பி. பேசினார்.
விவசாயிகள் மாநாடு
திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் கடந்த 3-ந் தேதி முதல் இன்று வரை வருவாய்த்துறையின் மூலம் ஜமாபந்தி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் திருவண்ணாமலை தெற்கு மற்றும் வெறையூர் உள்வட்டத்திற்காக ஜமாபந்தி இன்று நடைபெற்றது.
இதில் கலெக்டர் முருகேஷ் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.
தொடர்ந்து ஜமாபந்தி நிறைவு விழா மற்றும் விவசாயிகள் மாநாடு தாலுகா அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். பெ.சு.தி.சரவணன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். தாசில்தார் சுரேஷ் வரவேற்றார். உதவி கலெக்டர் வெற்றிவேல் திட்ட விளக்கவுரையாற்றினார்.
சிறப்பு அழைப்பாளராக சி.என்.அண்ணாதுரை எம்.பி. கலந்து கொண்டு முதியோர் உதவித்தொகை, வேளாண் எந்திரங்கள் உள்பட 549 பயனாளிகளுக்கு ரூ.63 லட்சத்து 73 ஆயிரத்து 700 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் மாநாடு நடத்தப்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மனுக்கள் பெறப்பட்டு அதன் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் 1223 மனுக்கள் பெறப்பட்டது.
இதில் 549 மனுக்கள் ஏற்கப்பட்டு தீர்வு காணப்பட்டும் உள்ளது. 606 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. மீதுமுள்ள 68 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளது. தற்போது தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் மூலம் நல்லாட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது.
மக்களை தேடி திட்டங்கள்
இந்த திட்டம் காலம் காலமாக நடைபெற்று கொண்டிருந்தாலும் இதில் மாறுதல் செய்யப்பட்டு அனைத்து மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று உள்ளது.
அரசு திட்டங்களை மக்கள் தேடி சென்ற காலங்கள் சென்று தமிழகத்தில் தற்போது எல்லா திட்டங்களும் மக்களை தேடி வரும் வகையில் ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது.
மக்களுக்கு கிடைக்காத திட்டங்கள் கூட வீடு தேடி வந்து கிடைக்கும் வகையில் திட்டங்களை முதல்- அமைச்சர் செயல்படுத்தி வருகின்றார்.
முதல்- அமைச்சர் தமிழகத்தை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும் இந்த வேளையில் ஏழை, எளிய மக்களுக்கும், விவசாயிகளுக்கும் அடிப்படை வசதிகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் எல்லா திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.
திருவண்ணாமலைக்கு முதல்- அமைச்சர் வருகை தரும் போது சுமார் 25 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. மக்கள் தங்கள் கோரிக்கை, குறைகள் குறித்து மனுக்கள் அளித்தால் எல்லா திட்டங்களும் உங்கள் இல்லம் தேடி வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் தி.மு.க. நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அமிர்தராஜ், லட்சுமி, விஜயலட்சுமி, வேளாண் உதவி இயக்குனர் அன்பழகன், வட்டவழங்கல் அலுவலர் முருகன் உள்பட பலர் கொண்டனர்.
முடிவில் தனி தாசில்தார் அமுல் நன்றி கூறினார்.