புதுப்பெண்ணை கொடூர கொலை செய்த கணவர் ...! உடலை கணவர் வீட்டு வாசல் முன்பு புதைத்த உறவினர்கள்


புதுப்பெண்ணை கொடூர கொலை செய்த கணவர் ...! உடலை கணவர் வீட்டு வாசல் முன்பு  புதைத்த உறவினர்கள்
x
தினத்தந்தி 15 April 2023 12:15 AM IST (Updated: 15 April 2023 12:04 PM IST)
t-max-icont-min-icon

புதுப்பெண்ணை கொன்ற கணவரின் வீட்டுக்கு உடலை கொண்டு வந்து வாசல் முன்பு உறவினர்கள் புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கன்னியாகுமரி

கருங்கல்:

புதுப்பெண்ணை கொன்ற கணவரின் வீட்டுக்கு உடலை கொண்டு வந்து வாசல் முன்பு உறவினர்கள் புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

புதுப்பெண்

குமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள பள்ளியாடி பகுதியைச் சேர்ந்தவர் ஜான்சன். கட்டிட காண்டிராக்டரான இவருடைய மகள் ஜெனிலா ஜோபி (வயது 23). இவருக்கும், கருங்கல் திப்பிரமலை பகுதியை சேர்ந்த சேம் மரியதாஸ் என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

சேம் மரியதாஸ் பெங்களூருவில் தங்கியிருந்து அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். திருமணத்திற்கு பிறகு ஜெனிலா ஜோபியும் பெங்களூருவில் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருடன் தங்கி வந்தார்.

இந்தநிலையில் சேம் மரியதாசுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

கத்தியால் குத்திக் கொலை

கடந்த 11-ந் தேதி இரவு ஜெனிலா ஜோபி வழக்கம் போல் தூங்க சென்றார். நள்ளிரவு அவர் தூங்கிக் கொண்டிருந்த போது கணவர் சேம் மரியதாஸ் கத்தியால் குத்தி கொடூரமாக கொன்றார்.

இதுகுறித்த புகாரின் பேரில் கர்நாடக மாநிலம் தொட்டாபள்ளபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து சேம் மரியதாசை கைது செய்தனர். பின்னர் ஜெனிலா ஜோபியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் நேற்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. ஜெனிலா ஜோபியின் உடலை பெற்றோர் வீட்டில் புதைக்காமல், கணவரின் வீட்டின் முன்பகுதியில் அடக்கம் செய்ய உறவினர்கள் முடிவு செய்தனர்.

கணவர் வீட்டில் உடல் அடக்கம்

இதற்காக அவரது வீடு அமைந்துள்ள கருங்கல் திப்பிரமலை பகுதிக்கு உடலை கொண்டு வந்தனர். அந்த வீட்டில் தற்போது சேம் மரியதாஸின் பாட்டி மட்டுேம வசித்து வருகிறார்.

இதனை தொடர்ந்து புதுப்பெண்ணின் உடல் வீட்டின் வளாகத்தில் வாசல் முன்பு அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தையொட்டி அங்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். மேலும் அசம்பாவித சம்பவம் நிகழ்ந்து விடாமல் இருப்பதற்காக போலீசாரும் குவிக்கப்பட்டனர்.

பெங்களூருவில் குத்திக்கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் கணவரின் வீட்டின் முன்பு அடக்கம் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சேம் மரியதாஸ் செய்த கொடூர செயலுக்கு பழிவாங்கும் விதமாக அவருடைய வீட்டிலேயே புதுப்பெண்ணின் உடலை உறவினர்கள் புதைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story