விபத்தில் உயிரிழந்த ஆம்புலன்ஸ் டிரைவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க கோரி உறவினர்கள் சாலை மறியல்


விபத்தில் உயிரிழந்த ஆம்புலன்ஸ் டிரைவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க கோரி உறவினர்கள் சாலை மறியல்
x

விபத்தில் உயிரிழந்த ஆம்புலன்ஸ் டிரைவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருச்சி

ஸ்ரீரங்கம், செப்.8-

விபத்தில் உயிரிழந்த ஆம்புலன்ஸ் டிரைவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆம்புலன்ஸ் டிரைவர்

லால்குடி அப்பாதுரை பகுதியை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 35). இவர் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரிந்து வந்தார். கடந்த ஜூன் மாதம் லால்குடியிலிருந்து 5 மாத கைக்குழந்தை உள்ளிட்ட 3 பேரை சிகிச்சைக்காக பழனிவேல் ஆம்புலன்சில் அழைத்து கொண்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சென்றார்.

ஆம்புலன்ஸ் நெம்பர் 1 டோல்கேட் அருகே உள்ள அகிலாண்டபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி மோதியதில் பழனிவேல், ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் செந்தில்குமார் உள்பட 5 பேர் காயமடைந்தனர். இதில் ஆம்புலன்ஸ் டிரைவர் பழனிவேல் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந் நிலையில் தனியார் மருத்துவமனைக்கு பணம் செலுத்த முடியாததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் முழுமையாக குணமடைவதற்கு முன்பாகவே குடும்பத்தினர் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர்.

சாலை மறியல்

இதையடுத்து நேற்று முன்தினம் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்படவே அவரை ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பழனிவேல் உயிரிழந்தார். பணியில் இருக்கும் போது உயிரிழந்த பழனிவேல் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும். குழந்தைகளின் கல்விக்கு உதவி தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி அவரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் நேற்று மாலை ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த போலீஸ் துணை கமிஷனர் அன்பு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story