துப்பாக்கி சூடு தொடர்பான விசாரணை அறிக்கையில் கூறப்பட்டு இருக்கும் போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய கோரிக்கை


தினத்தந்தி 19 Oct 2022 12:15 AM IST (Updated: 19 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

“துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையில் கூறப்பட்டு இருக்கும் போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.

தூத்துக்குடி

"துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையில் கூறப்பட்டு இருக்கும் போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பை சேர்ந்த மா.கிருஷ்ணமூர்த்தி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

கொலை வழக்கு

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒருநபர் ஆணைய விசாரணை அதிகாரி அருணா ஜெகதீசனின் அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த அறிக்கையில் மக்கள் நியாயமாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நீதிக்காக போராடிய போது, திட்டமிட்டு மறைந்து இருந்தும், துரத்தி சென்றும் மக்களை சுட்டுக் கொன்று உள்ளனர். இந்த படுகொலையை நிகழ்த்திய போலீஸ் துறை அதிகாரிகள் குறித்தும், துணை நின்ற அரசு அதிகாரிகள் குறித்தும் அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகையால் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை என்ற பெயரில் பணியிட மாற்றம், பணியிடை நீக்கம் என்ற வகையில் கண்துடைப்பு நடவடிக்கை எடுக்காமல், முழுமையாக பணி நீக்கம் செய்யப்பட்டு அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து உச்சபட்ச தண்டனை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசுக்கு நன்றி

மேலும், இந்த படுகொலைக்கு வித்திட்ட ஸ்டெர்லைட் ஆலை நிர்வாக அதிகாரிகள் மற்றும் உரிமையாளர் மீதும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அருணா ஜெகதீசன் அறிக்கையில் கூறப்பட்டு உள்ள பரிந்துரைகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும். மக்களை குற்றவாளிகளாக சித்தரிக்கும், சி.பி.ஐ. விசாரணையை ஏற்கமாட்டோம் என்று தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

அருணா ஜெகதீசன் அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்து வெளியிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கிறோம். தமிழக முதல்-அமைச்சர் வாக்குறுதி அளித்தபடி, நடப்பு சட்டமன்ற கூட்ட தொடரில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக சிறப்பு சட்டம் இயற்றி, ஆலையை நிரந்தரமாக அகற்றுவதற்கான நடவடிக்கையை விரைவுபடுத்த வேண்டும். துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நினைவு மண்டபம் கட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

--------------


Next Story