கவுன்சிலர்களின் கோரிக்கைகள் விரைவாக நிறைவேற்றப்படும்


கவுன்சிலர்களின் கோரிக்கைகள் விரைவாக நிறைவேற்றப்படும்
x

கவுன்சிலர்களின் கோரிக்கைகள் விரைவாக நிறைவேற்றப்படும் என்ற திருப்பத்தூர் நகராட்சி கூட்டத்தில் தலைவர் சங்கீதா வெங்கடேஷ் கூறினார்.

திருப்பத்தூர்

நகராட்சி கூட்டம்

திருப்பத்தூர் நகராட்சி கூட்டம் நேற்று நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ் தலைமையில் நடந்தது. ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் உள்ளாட்சி பிரநிதிகளுக்கு மதிப்பூதியம் வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

டி.டி.சி.சங்கர் (அ.தி.மு.க.):- திருப்பத்தூர் புதுப்பேட்டை ரோடு பகுதியில் இருந்து அவ்வை நகர் வழியாக கிருஷ்ணகிரி மெயின் ரோடு செல்லும் பாதையில் பல ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லி கொட்டப்பட்டு இதுவரை தார் சாலை போடப்படாததால் வாகனங்களில் செல்பவர்கள் நிலைத்தடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. உடனடியாக தார் சாலை அமைத்துத்தர வேண்டும்.

பி.வி.பிரேம்குமார் (தி.மு.க.):- நமக்கு நாமே திட்டத்தின் கீழ் திருப்பத்தூர் நகராட்சி முழுவதும் 36 கண்காணிப்பு கேமரா அமைக்க தனியார் நிறுவனம் சார்பில் 9 மாதங்களுக்கு முன்னர் ரூ.6 லட்சம் நிதி வழங்கப்பட்டது. எப்போது கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்?.

சங்கீதா வெங்கடேஷ் (தலைவர்):- கண்காணிப்பு கேமரா பொருத்த விரைவில் டெண்டர் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பாதாள சாக்கடை

கே.வி.ராஜேந்திரன் (தி.மு.க.):- தர்மராஜா கோவில் தெரு பகுதியில் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. பாஞ்சாலி மைதானத்தில் நகராட்சி கடைகள் கட்ட ஏற்பாடு செய்ய வேண்டும்.

மு.வெற்றி கொண்டான் (வி.சி.க.):- எனது வார்டு அதிக மக்கள் தொகை கொண்ட வார்டு. இங்கு இது வரை பாதாள சாக்கடை பணிகள் நடைபெறவில்லை. மழைநீர் முழுவதும் வெங்கடேஸ்வரா பகுதியில் தேங்குகிறது. கழிவுநீர் கால்வாய், தார் ரோடு இல்லை. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வருவதில்லை. உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஷபியுல்லா துணைத் தலைவர் (தி.மு.க.):-

திருப்பத்தூர் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளிலும் தண்ணீர் பிரச்சினையை போக்க ஒவ்வொரு வார்டிலும் 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. நகராட்சிக்கு உட்பட்ட பல வார்டுகளில் குப்பைகளை அள்ள தூய்மைப்பணியாளர்கள் வருவதில்லை.

விரைவாக நிறைவேற்றப்படும்

தலைவர் சங்கீதா வெங்கடேஷ்:- நகராட்சிக்கு புதிய கமிஷனர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு கமிஷனர் பணியிடம் காலியாக இருந்ததால் பல பணிகள் செய்ய காலதாமதம் ஆனது. இனி அப்படி இருக்காது. வார்டு கவுன்சிலர்களின் அனைத்து கோரிக்கைகளும் விரைவாக நிறைவேற்றப்படும். மாவட்டத்திலேயே திருப்பத்தூர் நகராட்சி முதன்மை நகராட்சியாகும் என்றார்.

தொடர்ந்து நகராட்சி கவுன்சிலர்கள் சுதாகர், சரவணன், பர்வீன் உள்ளிட்ட பலர் பேசினார்கள்.


Next Story