உறுப்பினர்களின் கோரிக்கைகள் நிதிநிலையின் அடிப்படையில் நிறைவேற்றப்படும்
உறுப்பினர்களின் கோரிக்கைகள் நிதிநிலையின் அடிப்படையில் நிறைவேற்றப்படும் என கீழையூர் ஒன்றியக்குழு தலைவர் கூறினார்.
வேளாங்கண்ணி:
உறுப்பினர்களின் கோரிக்கைகள் நிதிநிலையின் அடிப்படையில் நிறைவேற்றப்படும் என கீழையூர் ஒன்றியக்குழு தலைவர் கூறினார்.
ஒன்றியக்குழுக்கூட்டம்
நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியக்குழு கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் செல்வராணி ஞானசேகரன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணைத்தலைவர் சவுரிராஜ், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கவுசல்யா இளம்பரிதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜ்குமார், வெற்றிசெல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் பிச்சைமணி வரவேற்றார்.
கூட்டத்தில் உறுப்பினர்கள் இடையே நடந்த விவாதம் வருமாறு:-
தடுப்புச்சுவர்
செல்வம் (இ.கம்யூ):- வாழக்கரையில் உள்ள மயானத்திற்கு சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும்.
ஆறுமுகம் (பா.ஜ.க.) :-பிரதாபராமபுரத்தில் இருந்து வேட்டைக்காரனிருப்பு வரை செல்லக்கூடிய சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. அதை சீரமைக்க வேண்டும்.
மின்கம்பத்தை மாற்ற வேண்டும்
சுதாஅருணகிரி (தி.மு.க.) :- திருக்குவளையில் உள்ள வத்தமடையான் குளத்தின் நடுவே மின் கம்பம் அமைக்கப்பட்டு உயர் மின்னழுத்த மின்கம்பிகள் செல்கிறது. இந்த மின்கம்பிகள் அறுந்து குளத்தில் விழுந்தால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அதனை மாற்றி அமைத்து தர வேண்டும்.
சுப்பிரமணியன் (அ.தி.மு.க) :- அச்சுகட்டளையில் இருந்து வெண்மணச்சேரி வரை ஆற்றங்கரையில் செல்லக்கூடிய சாலையை தார்ச்சாலையாக அமைத்து தர வேண்டும்.
சரண்யாபன்னீர்செல்வம் (தி.மு.க.) :- சோழவித்யாபுரத்தில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பழுது நீக்கம் செய்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாங்கண்ணியில் இருந்து சின்னத்தும்பூருக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்
லென்சோயாசிவபாதம் (தி.மு.க.) :- தண்ணியிலபாடி ஊராட்சியில் புதிய மின் மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏழிசைவல்லபி (அ.தி.மு.க) :- விழுந்தமாவடி கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளிகளுக்கு வகுப்பறை கட்டிடம் கட்டித்தர வேண்டும்.
செல்வராணிஞானசேகரன் (ஒன்றியக்குழுத்தலைவர்) :-உறுப்பினர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிதி நிலையின் அடிப்படையில் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.