பசு குறுக்கே வந்ததால் குளத்தில் பாய்ந்த மீட்பு வாகனம்
நாகர்கோவில் சுங்கான்கடையில் பசுமாடு குறுக்கே வந்ததால் மீட்பு வாகனம் குளத்தில் பாய்ந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தி்ங்கள்சந்தை,
நாகர்கோவில் சுங்கான்கடையில் பசுமாடு குறுக்கே வந்ததால் மீட்பு வாகனம் குளத்தில் பாய்ந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குளத்தில் பாய்ந்த வாகனம்
நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் உள்ள அரசு விரைவு போக்குவரத்துக் கழக பணிமனையில் பழுதடைந்த பஸ்களை சரி செய்ய பயன்படுத்தும் ஒரு மீட்பு வாகனம் உள்ளது. இந்த வாகனம் நேற்று மாலையில் தோட்டியோட்டில் இருந்து நாகர்கோவில் நோக்கி புறப்பட்டது. அந்த வாகனம் சுங்கான்கடை பகுதியில் வந்த போது ஒரு பசுமாடு சாலையின் குறுக்கே பாய்ந்ததாக தெரிகிறது. இதனால் அதன் மீது மோதாமல் இருக்க டிரைவர் திடீரென பிரேக் பிடித்தார். இதில் வாகனம் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த குளத்தில் பாய்ந்தது.
வாகனத்தின் முன்பகுதி குளத்திலும், மீதமுள்ள பகுதி சாலையிலுமாக அந்தரத்தில் தொங்கி கொண்டு இருந்தது. இதுபற்றி தகவல் அறிந்த குளச்சல் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் குளத்தில் பாய்ந்த வாகனத்தை 1¼ மணி நேரம் போராடி மீட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக டிரைவர் உள்பட யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்து காரணமாக நாகர்கோவில்- திருவனந்தபுரம் ேதசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.