குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது


குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது
x

குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய மழையால் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்்கை பாதிக்கப்பட்டது.

வெளுத்து வாங்கிய கனமழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை கடந்த 29-ந்தேதி தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ள காரணத்தினாலும், தமிழகத்தின் கடலோர பகுதிகளான திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.

அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் இரவு முதல் கன மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பள்ளி-கல்லூரிக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அளித்து உத்தரவிட்டது. இந்தநிலையில் நேற்று காலை முதல் கன மழை வெளுத்து வாங்கியது. தொடர் மழையினால் கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டது. பெரும்பாலான சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளித்தது. இதனால் சாலைகளில் செல்லமுடியாமல் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது

திருவாரூர் அருகே உள்ள கொடிக்கால் பாளையத்தில் ஹஜ்ரத் ஜகான்ஷா 60 அடி பாவா தர்கா உள்ளது. மழை காரணமாக 60 அடி பாபா தர்காவை சுற்றிலும், நுழைவு வாயிலிலும் 2 அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கி நின்றது. இதனால் தர்காவில் வழிபாடு நடத்துவதில் சிரமம் ஏற்பட்டது. வடிகால்கள் தூர்வாரப்படாத காரணத்தினாலும் மழைநீர் வெளியேறுவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.

இதேபோல் திருவாரூர் அருகே உள்ள கீழக்காவதுக்குடி ஊராட்சிக்குட்பட்ட அம்மாளு நகர், லட்சுமி நகர், வெங்கடேஸ்வரா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. தற்போது தாளடி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். கனமழையால் தாளடி இளம் பயிர்கள் நீரில் மூழ்கியது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மழை அளவு

நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- திருவாரூர்-25, நன்னிலம்-29 குடவாசல்-24, வலங்கைமான்-27, மன்னார்குடி-24, நீடாமங்கலம்-31, பாண்டவையாறு தலைப்பு-19, திருத்துறைப்பூண்டி-41, முத்துப்பேட்டை-7. இதில் அதிகபட்சமாக நீடாமங்கலத்தில் 31 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

நன்னிலம்

நன்னிலம் வட்டாரத்தில் 8 ஆயிரம் எக்டேரில் சம்பா- தாளடி நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நன்னிலம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் சுரக்குடியில் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.


Next Story