குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு தாயின் தோளில்தான் சுமத்தப்படுகிறது-பாஸ்போர்ட் வழக்கில் மதுரை ஐகோர்ட்டு நீதிபதி உருக்கம்


குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு தாயின் தோளில்தான் சுமத்தப்படுகிறது-பாஸ்போர்ட் வழக்கில் மதுரை ஐகோர்ட்டு நீதிபதி உருக்கம்
x

தாய், தந்தை இடையே கருத்து வேறுபாடு ஏற்படும்போது, குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு தாயின் தோளில்தான் சுமத்தப்படுகிறது என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதி உருக்கமாக தெரிவித்தார்.

மதுரை

தாய், தந்தை இடையே கருத்து வேறுபாடு ஏற்படும்போது, குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு தாயின் தோளில்தான் சுமத்தப்படுகிறது என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதி உருக்கமாக தெரிவித்தார்.

கணவன்-மனைவி கருத்து வேறுபாடு

கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் தாலுகா, காஞ்சிரவிளை பகுதியைச் சேர்ந்த துளசி மோனி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

எனக்கும், முருகேசன் என்பவருக்கும் கடந்த 2002-ம் ஆண்டில் திருமணம் நடந்தது. ஒரு மகன், மகள் உள்ளனர். திருமணமானதில் இருந்தே வரதட்சணை கேட்டு கணவரும், அவரின் குடும்பத்தினரும் கொடுமைப்படுத்தி வந்தனர்.

இதனால் எனக்கும், கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து நான் விவாகரத்து கேட்டு தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் உள்ளது.

எனது மகன் சிவவிக்னேஷ், பிளஸ்-2 முடித்துவிட்டார். தற்போது மால்டோவா நாட்டில் உள்ள பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படிக்க விண்ணப்பித்தார்.

பாஸ்போர்ட் கிடைக்கவில்லை

அந்த பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ். மற்றும் எம்.டி. ஆகிய படிப்புகளை 6 ஆண்டுகள் படிக்க அழைக்கப்பட்டு உள்ளார். அதன்படி சிவவிக்னேஷ், 15.10.2022 அன்றைக்குள் அங்கு சென்றிருக்க வேண்டும்.

முன்னதாக அவருக்கு பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்திருந்தோம். விவகாரத்து வழக்கு நிலுவையில் இருப்பதால் பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் என் கணவரிடம் கையெழுத்து பெற முடியவில்லை. ஆனால் தாய்-தந்தை இருவரும் கையெழுத்து போட்டால்தான் பாஸ்போர்ட் கிடைக்கும் என கூறி, நிராகரித்துவிட்டனர். என் மகனுக்கு முழு பொறுப்பும் நான் மட்டும்தான். அவரது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

கேள்விக்குறியான எதிர்காலம்

இந்த வழக்கு நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் வக்கீல் பினேகாஸ் ஆஜராகி, மனுதாரர் தனது கணவரால் 4 ஆண்டுகளுக்கு முன்பே கைவிடப்பட்டுள்ளார். 2 குழந்தைகளும் மனுதாரரின் முழு பொறுப்பில் உள்ளனர். இந்த சூழ்நிலையில் மனுதாரரின் மகன் வெளிநாட்டில் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

தற்போது கூடுதல் அவகாசத்தை மால்டோவா நாட்டு பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது. ஆனால் பாஸ்போர்ட் கிடைக்காததால், வெளிநாடு செல்வது தாமதமாகி, அவரின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது என்றார்.

பின்னர் பாஸ்போர்ட் அதிகாரிகள் சார்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல், கணவன்-மனைவி இருவரும் தனித்தனியாக வசிக்கின்றனர். அவர்களுக்கு விவாகரத்து வழங்கப்படவில்லை. கோர்ட்டின் உத்தரவை பெற்ற பின்புதான் பாஸ்போர்ட் நடவடிக்கைகளை அதிகாரிகள் தொடர முடியும், என்றார்.

தாயின் தோளில் சுமை

இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படும்போது, குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு தாயின் தோளில்தான் சுமத்தப்படுகிறது. அந்த வகையில் மனுதாரர், தனது மைனர் மகனின் முன்னேற்றத்திற்காக இந்த கோர்ட்டை நாடியுள்ளார். தன் மகனின் செயல்பாடுகளுக்கு அவர்தான் முழு பொறுப்பு.

இதை கருத்தில் கொண்டு, அவரது கோரிக்கையை இந்த கோர்ட்டு பரிசீலிக்க விரும்புகிறது. எனவே மனுதாரர் மகனுக்கு பாஸ்போர்ட் வழங்க மறுத்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர் மகன் மால்டோவா நாட்டிற்கு படிக்க செல்வதற்காக ஒரு வாரத்தில் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.


Related Tags :
Next Story