திற்பரப்பு வலது கரை கால்வாயை தூர்வார வேண்டும்
அருமனை உள்ளிட்ட 5 வருவாய் கிராமங்கள் பாசன வசதி பெற திற்பரப்பு வலது கரை கால்வாயை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
அருமனை,
அருமனை உள்ளிட்ட 5 வருவாய் கிராமங்கள் பாசன வசதி பெற திற்பரப்பு வலது கரை கால்வாயை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பாசன வசதி
திற்பரப்பு தடுப்பு அணையில் இருந்து திற்பரப்பு வலது கரை கால்வாய் வழியாக வரும் தண்ணீர் மூலம் அருமனை, முழுக்கோடு, வெள்ளாங்கோடு, மஞ்சாலுமூடு, சிதறால் ஆகிய 5 வருவாய் கிராமங்கள் பாசன வசதி பெற்று வந்தன. இந்த பகுதிகளில் உள்ள குளங்கள் மற்றும் குடிநீர் கிணறுகளுக்கு தண்ணீர் கிடைக்கவும், விவசாயத்திற்கும் கால்வாய் பெருமளவு பயன்பட்டு வந்தது.
கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக வலது கரை கால்வாய் வழியாக தண்ணீர் வராததால் இப்பகுதி விவசாயிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் கால்வாயில் பல்வேறு இடங்களில் மதகுகள் உடைந்தும், தூர்வாராததால் மண்நிரம்பியும் தண்ணீர் செல்ல முடியாமல் உள்ளது. மேலும் கால்வாயின் உள்பகுதியில் புதர்களும் மண்டி கிடக்கிறது.
தூர்வார வேண்டும்
கால்வாயில் தண்ணீர் வராததால், ஆங்காங்கே உள்ள குளங்கள் வறண்டு உள்ளது. இதனால் அப்பகுதியில் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே உணவு பொருட்களை பயிரிட்டு வந்த விவசாயிகள் பணப்பயிர்கள் பயிரிட தொடங்கியுள்ளனர். கோடை காலங்களில் கிணறுகளில் தண்ணீர் குறைவதற்கும், குடிநீர் பஞ்சம் ஏற்படுவதற்கும் கால்வாயில் தண்ணீர் வராததே காரணம் என்று பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர். இந்தநிலையில் கால்வாயை முறையாக தூர்வாரி கடைமடை வரை தண்ணீர் விட வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.