கழிவுகளை தின்னும் பசு மாடுகளால் பால் நஞ்சாக மாறும் அபாயம்


கழிவுகளை தின்னும் பசு மாடுகளால் பால் நஞ்சாக மாறும் அபாயம்
x

கழிவுகளை தின்னும் பசு மாடுகளால், பால் நஞ்சாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல்

பச்சிளம் குழந்தைக்கு, தாய்ப்பாலுக்கு நிகராக எந்த உணவும் இல்லை. குழந்தைக்கு உணவாக மட்டுமின்றி நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் மருந்தாகவும் தாய்ப்பால் விளங்குகிறது.

பசும் பால்

தாய்ப்பாலுக்கு அடுத்தப்படியாக பசும் பால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. இதனால் தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு பசும் பால் உணவாக கிடைக்கிறது. பசும் பால் அனைத்து வயதினருக்கும் ஏற்றது. எனவே குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்கள் வரை அனைவருக்கும் இரவில் தூங்கும் முன்பு பால் குடிக்கும் பழக்கம் இருக்கிறது.

இதனால் பசும் பாலின் தேவை அதிகமாக இருக்கிறது. எனவே பால் உற்பத்தி, குடும்ப பொருளாதாரத்தை தாங்கி பிடிக்கும் தொழிலாக உள்ளது. இதனால் கிராமங்களில் மட்டுமின்றி நகரங்களிலும் பசு மாடு வளர்ப்பு அதிகரித்து இருக்கிறது. பசு மாடுகள் அதிக அளவில் பால் சுரக்க சத்தான தீவனம் வழங்க வேண்டும்.

தீவனம்

புற்கள், புண்ணாக்கு, பருத்தி விதைகளை தீவனமாக கொடுப்பது வழக்கம். இந்த தீவனங்கள் அனைத்தும் கிராமங்களில் வளரும் பசு மாடுகளுக்கு கிடைத்து விடுகிறது.

மேலும் மாடுகள் மேய்ச்சலுக்காக வயல்வெளிகளுக்கு அழைத்து செல்லப்படுவதால், அதன் மூலமாகவும் புற்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால் நகரங்களில் வளரும் மாடுகளுக்கு பசும்புல் கிடைப்பது குறைவு தான். வைக்கோல், சோள தட்டை போன்றவற்றுடன் புண்ணாக்கு, பருத்தி விதைகளை ஊற வைத்து கொடுக்கின்றனர்.

ஆனால் நகரங்களில் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்ல முடியாது. அதேநேரம் மாடுகளை 24 மணி நேரமும் கட்டி வைப்பது நன்றாக இருக்காது. இதற்காக மாடுகள் காலார நடந்து உலாவட்டும் எனும் ரீதியில் அவிழ்த்து விடப்படுகின்றன. இதில் திண்டுக்கல் நகரமும் விதிவிலக்கல்ல.

கழிவு-குப்பைகள்

திண்டுக்கல்லில் நாகல்நகர், ஆர்.எம்.காலனி, ரவுண்டுரோடு, திருச்சி சாலை, திருவள்ளுவர் சாலை உள்பட பல சாலைகளில் மாடுகள் உலாவருவதை பார்க்க முடிகிறது. இவ்வாறு சாலையில் உலாவரும் மாடுகள் சுவரொட்டி, குப்பையில் கிடக்கும் கழிவு உணவுகள், காகிதம் ஆகியவற்றை உணவாக தின்பது வழக்கம்.

இதற்கிடையே சமீபகாலமாக குப்பைகளில் உணவு பொட்டலம் கட்ட பயன்படுத்திய பாலித்தீன் பைகள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பயன்படுத்திய பேம்பர்ஸ், சானிட்டரி நாப்கின்கள், புண்களில் கட்டப்பட்ட பஞ்சுகள் வீசப்படுகின்றன.

நஞ்சாக மாறும் பால்?

இந்த கழிவுகளுக்கு நடுவே குப்பையோடு, குப்பையாக கிடப்பவற்றை மாடுகள் உணவாக தேடி தின்கின்றன. ஒருசில வேளை தீவனம் கிடைக்காமல் பசியோடு அலையும் மாடுகள், பாலித்தீன் கழிவுகள் உள்பட அனைத்தையும் தின்னும் நிலை ஏற்படுகிறது.

இந்த கழிவுகளை தின்பது மட்டுமின்றி கழிவுகளோடு கலந்து கிடக்கும் உணவு, காகிதத்தை தின்கின்றன. இத்தகைய கழிவுகளை தின்னும் பசுக்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டு, அவை கொடுக்கும் பாலும் நஞ்சாக மாறும் அபாயம் உள்ளது. இதனால் பசும் பாலை விரும்பி பருகும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது.

தடுப்போம்-தவிர்ப்போம்

உடலுக்கு உறுதிதரும் என்ற நம்பிக்கையில் தான் பாலை பருகுகிறோம். ஆனால் அந்த பாலும் நஞ்சாக மாறினால் என்னவாகும்? ஏற்கனவே ரசாயன கலப்பால் உணவு பொருட்கள் விஷமாகி வருகின்றன. இதற்கிடையே பாலும் விஷமாக மாறிவிடுமோ? என்பது கவலை அளிப்பதாக உள்ளது.

இதை தவிர்க்க பசு மாடுகளை சாலையில் அவிழ்த்து விடுவதை தவிர்ப்பது மிகவும் நல்லது. அதோடு கழிவுகளை தின்னாத வகையில் வளர்க்க வேண்டும். இதேபோல் கழிவுகளை திறந்தவெளியில் வீசுவதை கைவிட வேண்டும். இதன்மூலம் பால் விஷமாக மாறுவதை தடுக்கலாம் என்பது அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Next Story