சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது


சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது
x
தினத்தந்தி 26 Jun 2023 12:15 AM IST (Updated: 26 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நாளை நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழி அருகே திருமுல்லைவாசல் பழுவஞ்சி ஆறு, உப்பனாற்றில் தடுப்பணை இல்லாததால் உப்பு நீர் ஊருக்குள் புகுந்து திருமுல்லைவாசல், ராதாநல்லூர், வழுதலைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கடந்த 2 ஆண்டுகளாக விவசாயிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை நடவடிக்கை எடுக்காத பொதுப்பணித்துறையை கண்டித்தும், திருமுல்லைவாசல் சாந்தாயி அம்மன் கோவில் அருகில் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் பயணிகள் நிழலகம் அமைத்து தர கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நாளை(செவ்வாய்க்கிழமை) சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக சீர்காழி தாசில்தார் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தாசில்தார் செந்தில்குமார் தலைமை தாங்கினார். கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் அருண்மொழி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் கொள்ளிடம் கேசவன், சீர்காழி அசோகன், தி.மு.க. நிர்வாகி ஸ்டீபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வரும் நிதியாண்டில் திருமுல்லைவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட சாந்தாயி அம்மன் கோவில் அருகில் பயணிகள் நிழலகம் அமைத்து தர நடவடிக்கை எடுப்பது எனவும். திருமுல்லைவாசல் பழுவஞ்சி ஆறு, உப்பனாற்றில் தடுப்பணை அமைக்க சீர்காழி பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் நாளை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story