கிரிவலம் சென்று வந்த பாதை அடைக்கப்பட்டதால் சாலை மறியல்


கிரிவலம் சென்று வந்த பாதை அடைக்கப்பட்டதால் சாலை மறியல்
x

திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் சென்று வந்த பாதை அடைக்கப்பட்டதால் வியாபாரிகள், பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் சென்று வந்த பாதை அடைக்கப்பட்டதால் வியாபாரிகள், பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

சித்ரா பவுர்ணமி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமியையொட்டி தமிழகம் மட்டுமல்லாது பல்ேவறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் உள்பட லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். அவர்கள் நேற்று மதியம் முதலே கிரிவலம் செல்ல தொடங்கினர். விடிய விடிய தொடர்ந்த பக்தர்கள் கிரிவலம் நாளை காலை வரை தொடர உள்ளது.

வழக்கமாக பவுர்ணமி நாட்களில் கிரிவலம் வரும் பக்தர்கள் திருவண்ணாமலை சின்னக்கடை வீதியில் உள்ள பூத நாராயணர் கோவில் அருகில் இருந்து இரட்டைப் பிள்ளையார் கோவில் வழியாக வந்து ராஜகோபுரம் முன்பு சாமி தரிசனம் செய்துவிட்டு கிரிவலத்தை தொடங்குவார்கள். ஆனால் இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமியையொட்டி பூத நாராயணர் கோவிலில் இருந்து இரட்டை பிள்ளையார் கோவில் அருகே செல்லும் பாதையை போலீசார் முள்வேலி கொண்ட பேரிக்காடுகள் மூலம் அடைத்தனர்.

அந்த பாதையில் சிறு, குறு வியாபாரிகள் கடைகள் அமைத்து இருந்தனர். பாதை அடைக்கப்பட்டதால் பக்தர்கள் அவ்வழியே செல்ல முடியாமல் மிகவும் அவதி அடைந்து திணறும் நிலை ஏற்பட்டது.

இதனால் பெருமளவு வியாபாரிகள் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். இதனை தொடர்ந்து பூத நாராயணர் கோவில் அருகே அடைக்கப்பட்ட பாதையை உடனடியாக திறந்து விடக் கோரி அந்தப் பகுதியை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் கிரிவலம் சென்ற பக்தர்கள் திடீரென பூத நாராயணர் கோவில் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் சமரசம்

தகவல் அறிந்த திருவண்ணாமலை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி தலைமையிலான போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது இந்த முறை அந்தப் பாதை அடைக்கப்பட்டால் இது போன்று வரும் பவுர்ணமி நாட்களிலும் இந்த பாதை அடைக்கப்படும். எனவே இவ்வாறு இல்லாமல் தொடர்ந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அந்தப் பாதையை திறந்து விட வேண்டும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர். போலீசாரின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story