சாலையை அகலப்படுத்தி வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்
சாலையை அகலப்படுத்தி வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்
முத்துப்பேட்டை திமிலத்தெருவில் சாலையை அகலப்படுத்தி வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாய்க்கால் ஆக்கிரமிப்பு
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சியின் 14-வது வார்டு பகுதியை சேர்ந்த தெற்குதெரு, திமிலத்தெரு, திமிலத்தெரு 1-வது சந்து, 2-வது சந்து, 3-வது சந்து, 4-வது சந்து ஆகிய பகுதியில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இங்கு ஏராளமான காலனி வீடுகளும் உள்ளது. இதில் பேட்டை சாலையிலிருந்து பிரிந்து திமிலத்தெரு செல்லும் சாலையில் சுமார் 500 மீட்டர் தூரம் மட்டுமே பேரூராட்சி சாலையாகும். அதன் தொடர்ச்சியாக உள்ள சாலை தவ்ஹீத் பள்ளி வாசலை கடந்து செல்கிறது. இந்த சாலை இன்னும் பேரூராட்சிக்கு எழுதி கொடுக்காததால் இந்த பகுதி மக்களுக்கு நீண்டகாலமாக எந்தவித அடிப்படை வசதிகளையும் பேரூராட்சி நிர்வாகம் செய்து கொடுக்க முடியவில்லை. இதனால் அந்த பகுதி முழுவதும் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
இந்த பகுதியில் முறையான வடிகால் வசதியும் கிடையாது. இதில் அரக்குளத்தில் தண்ணீர் நிறைந்து கோவிலான்தோப்பு கடந்து திமிலத்தெரு வழியாக சென்று பேட்டை சாலையில் உள்ள சோதனை சாவடி அருகே வடியும் இப்பகுதியின் பிரதான வாய்க்கால் ஆக்கிரமிப்பால் மாயமாகிவிட்டது.
வடிகால் வசதி
இதனால் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் சாலையோரங்களிலும், பல இடங்களில் சாலையில் குளம் போன்றும் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. அதேபோல் மழைக்காலங்களில் மழைநீர் வடிய வழியில்லாததால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி கிடக்கும் சூழ்நிலை உருவாகும். இதனால் மக்கள் வெளியில் நடந்து கூட வர முடியாமல் வீட்டிற்குள் முடங்கும் சூழ்நிலை உள்ளது. இதனை அறிந்த மாரிமுத்து எம்.எல்.ஏ. சேதமடைந்த சாலையை சீரமைக்க தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்து உள்ளார். விரைவில் பணிகள் தொடங்க உள்ளது. எனவே இந்த சாலை பணிகள் தொடங்குவதற்கு முன்பு குறுகிய சாலையை அகலப்படுத்தி வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் லக்கி நாசர் கூறுகையில்,
திமிலத்தெரு விரிவாக்கப்பட்ட பகுதியான 1-வது சந்து, 2-வது சந்து, 3-வது சந்து, 4-வது சந்து, பி.ஆர்.எம்.தோப்பு, கே.எம்.எஸ். தோப்பு, எஸ்.கே.எம். தோப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள திமிலத்தெரு பகுதியில் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதை காணமுடியும். இதனையடுத்து எம்.எல்.ஏ. நிதி ஒதுக்கீடு செய்தார். எனவே இந்த சாலையை போடுவதற்கு முன்பு குறுகிய சாலையை அகலப்படுத்த வேண்டும். அதேபோல் கழிவுநீர் மற்றும் மழைநீர் வடியும் வகையில் வடிகால் வசதி அமைத்து தரவேண்டும் என்றார்.