வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி நகையை பறித்த கொள்ளையன்
கடையநல்லூர் அருகே, பட்டப்பகலில் வீடுபுகுந்து தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி நகையை பறித்துச்சென்ற கொள்ளையனை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்
கடையநல்லூர்:
கடையநல்லூர் அருகே, பட்டப்பகலில் வீடுபுகுந்து தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி நகையை பறித்துச்சென்ற கொள்ளையனை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
தனியாக இருந்த மூதாட்டி
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இடைகால் அண்ணா நகர் பழைய ரேஷன் கடை தெருவை சேர்ந்தவர் அப்துல் ரகுமான். இவருடைய மனைவி அலீமா பீவி (வயது 69). அப்துல் ரகுமான் இறந்து விட்டார்.
இவர்களுடைய மகன் சாகுல் ஹமீது (50), கேரளாவில் கூலி வேலை செய்து வருகிறார். அலீமா பீவி இடைகாலில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
வீடுபுகுந்து நகை பறிப்பு
நேற்று காலை 10 மணியளவில் அலிமா பீவி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் திடீரென கேட்டை திறந்து வீட்டுக்குள் புகுந்தான். அங்கு வீட்டில் தனியாக இருந்த அலீமா பீவியை கொடூரமாக தாக்கினான். அவருடைய முகத்தை பிடித்து சுவரில் மோதச்செய்தான். பின்னர் அலீமா பீவியின் காதில் கிடந்த 5 கிராம் கம்மலை பறித்தான். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் இலத்தூர் இன்ஸ்பெக்டர் வேல்கனி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். காயம் அடைந்த மூதாட்டியை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
4 தனிப்படைகள்
மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அங்கு பதிவான ரேகைகளை பதிவு செய்தனர். மோப்ப நாயும் அழைத்து வரப்பட்டது.
மூதாட்டியை தாக்கி நகை பறித்து சென்ற கொள்ளையனை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இதற்காக தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமாறன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டும் போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் வீடு புகுந்து மூதாட்டி தாக்கி கம்மலை கொள்ளையன் பறித்து சென்ற பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது