கோவில் உண்டியலை தூக்கி சென்ற கொள்ளையர்கள்


கோவில் உண்டியலை தூக்கி சென்ற கொள்ளையர்கள்
x

ஆரணியில் கோவில் உண்டியலை கொள்ளையர்கள் தூக்கி சென்றனர்.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணியில் கோவில் உண்டியலை கொள்ளையர்கள் தூக்கி சென்றனர்.

விநாயகர் கோவில்

ஆரணி ஆரணிப்பாளையம் பிள்ளையார் கோவில் தெருவில் கில்லா செல்வ விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலாகும்.

இந்த கோவிலை வழக்கம்போல கிருஷ்ணமூர்த்தி சிவாச்சாரியார் நேற்று இரவு பூட்டிக்கொண்டு சென்று உள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை கோவிலின் முகப்பில் சாமி கும்பிட வந்திருந்த சிலர் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து கோவில் நிர்வாகிகளிடம் தகவல் தெரிவித்தனர்.

கோவில் நிர்வாகிகள் உடனடியாக ஆரணி டவுன் போலீசுக்கும், செயல் அலுவலர் சிவாஜிக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

உண்டியலை தூக்கி சென்றனர்

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பி.புகழ், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுந்தரேசன், கிருஷ்ணமூர்த்தி, மகேந்திரன் மற்றும் போலீசார் உடனடியாக கோவிலில் சென்று பார்த்த போது கோவிலில் உள்புறம் எவர்சில்வர் உண்டியல் கீழே பொருத்தாமல் அப்படியே வைக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது.

கோவில் உண்டியலை உடைத்தால் சத்தம் கேட்டு அருகில் உள்ள பொதுமக்கள் விழித்தால் மாட்டிக் கொள்வோம் என்று நினைத்த கொள்ளையர்கள் உண்டியலை அலேக்காக தூக்கி சென்று விட்டனர்.

இதையடுத்து போலீசார் அங்கு இருந்த கண்காணிப்பு கேமராக்களை பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொதுமக்கள் அச்சம்

ஆரணி நகரில் ஏற்கனவே வி.ஏ.கே. நகர் பகுதியில் அமைந்துள்ள சக்தி விநாயகர் கோவிலிலும், ஆரணி - சேத்துப்பட்டு நெடுஞ்சாலையில் சக்தி நகர் பகுதியில் அமைந்துள்ள முத்தாலம்மன் கோவிலிலும் மர்மநபர்கள் உண்டியலை உடைத்து திருடி சென்றுள்ளனர்.

தொடர்ந்து கோவில் உண்டியல்களை கைவரிசை காட்டும் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் ஆரணி நகரில் உண்டியல் உடைப்பு சம்பவம், பெண்களிடம் நகை பறிப்பு, வழிப்பறி சம்பவம் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.


Next Story