நல்ல சமுதாயத்தை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானது
நல்ல சமுதாயத்தை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானது
திருவாரூரில் போதை பழக்கத்தை ஒழித்து நல்ல சமுதாயத்தை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானது என துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் கூறினார்.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருவாரூரில் போலீஸ் துறை சார்பில் போதை பொருள் ஒழிப்பு குறித்து அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி வேலுடையார் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.அப்போது அவர் கூறியதாவது:-
போதை பொருட்களால் இளைஞர்கள் சீரழிந்து வருகின்றனர். அவர்களை போதை பழக்கத்தில் இருந்து மீட்டு கொண்டு வர வேண்டும். போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
போலீசார் தனி கவனம்
போதை பழக்கத்தை ஒழிக்க போலீசார் தனிக்கவனம் செலுத்தி வருகின்றனர். இருப்பினும் ஒரு சில கும்பல், மாணவ-மாணவிகள், இளைஞர்களை குறி வைத்து போதை பொருட்களை விற்பனை செய்து அடிமையாக்கி வருகின்றனர்.
போதை பொருள் விற்பனை செய்வது குறித்து தெரியவந்தால் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுக்க வேண்டும்.
மாணவ-மாணவிகளுக்கு கல்வி என்பது மிக முக்கியமானது. அதனை கற்று தருகின்ற ஆசிரியர்கள் பணி சிறப்புக்குரியது. எனவே கல்வியுடன், நல்ல ஒழுக்கங்களை மாணவர்களுக்கு கற்று தர வேண்டும். போதை பழக்கத்தை ஒழித்து நல்ல சமுதாயத்தை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானது.
இவ்வாறு அவர் கூறினார். இதில் அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர்.