ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மேற்கூரை சிமெண்டு காரைகள் இடிந்து விழுந்தது


ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மேற்கூரை சிமெண்டு காரைகள் இடிந்து விழுந்தது
x

விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வியாபாரிகள் ஓய்வறை கட்டிடத்தின் மேற்கூரை சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்


விருத்தாசலம்,

விருத்தாசலத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைந்துள்ளது. இந்த விற்பனை கூடத்திற்கு விருத்தாசலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது நிலத்தில் விளைந்த விளைப் பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். அதுபோல் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த வியாபாரிகளும் இங்கு வந்து விளைப் பொருடகளை கொள்முதல் செய்வார்கள். அவ்வாறு வரும் வியாபாரிகள் தங்கி ஓய்வு எடுப்பதற்காக கடந்த 2001-ம் ஆண்டு ஓய்வறை கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தை முறையாக பராமரிக்காததால் கட்டிடம் சேதமடைந்து காணப்பட்டது.

இந்த நிலையில் நேற்று, வியாபாரிகள் ஓய்வறை கட்டிடத்தில் அமர்ந்திருந்தனர். அப்போது, கட்டிடத்தின் மேற்கூரை சிமெண்டு காரைகள் திடீரென பெயர்ந்து விழுந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த வியாபாரிகள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர். இருப்பினும் அறையின் உள்ளே இருந்த பிளாஸ்டிக் சேர்கள், மின்விசிறி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்தது. இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், இந்த கட்டிடத்தை முறையாக பராமரிக்கக்கோரி பலமுறை நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. கழிவறை, குளியல் அறை வசதி இருந்தும் அதனை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. அதனால் வியாபாரிகள் தங்கி ஓய்வெடுக்கும் இந்த கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிதாக கட்டிடம் அமைத்து தர வேண்டும்.

மேலும் வியாபாரிகளுக்கு கிழிந்த சாக்குகளை தருகிறார்கள். இதனால் ரூ.15 ஆயிரம் விலை வைத்து எடுக்கக்கூடிய எள் போன்ற தானியங்களை நாங்கள் எடுத்தும் செல்லும்போது வழியிலேயே கொட்டி விடுகிறது. நல்ல சாக்குகளை கூட ஒழுங்குமுறை விற்பனை கூடம் தர மறுக்கிறது. வியாபாரிகள் கொள்முதல் செய்வதற்கு நல்ல சாக்குகளை ஒழுங்குமுறை விற்பனை கூட நிர்வாகம் ஏற்பாடு செய்து தர வேண்டும் என்றனர்.

இருப்பினும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வியாபாரிகள் ஓய்வறை கட்டிடத்தின் மேற்கூரை சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுது்தியது.


Next Story