அரசு தொடக்கப்பள்ளி கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்தது


அரசு தொடக்கப்பள்ளி கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்தது
x

கறம்பக்குடி அருகே அரசு தொடக்கப்பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அதிகாலையில் சம்பவம் நிகழ்ந்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

புதுக்கோட்டை

அரசு தொடக்கப்பள்ளி

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள ராங்கியன் விடுதியில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 40 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் இல்லை. மாற்றுப்பணி அடிப்படையில் தினம் ஒரு ஆசிரியர் வந்து செல்கிறார்.

மேற்கூரை இடிந்து விழுந்தது

இந்நிலையில் நேற்று காலை பள்ளிக்கூடம் தொடங்கும் முன்னர் பள்ளியை சுத்தம் செய்வதற்காக தூய்மை பணியாளர் பள்ளியை திறந்தார். அப்போது பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து சிமெண்டு பூச்சுகள் கீழே விழுந்து கிடந்தன. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் ஊர்பிரமுகர்களிடம் தகவல் தெரிவித்தார். மேலும் இது குறித்த தகவலின்பேரில் புதுக்கோட்டை உதவி கலெக்டர் முருகேசன் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று இடிந்து விழுந்த பள்ளி கட்டிடத்தை பார்வையிட்டனர். தீபாவளி முடிந்து புத்தாடை அணிந்து பெற்றோர்களுடன் பள்ளிக்கு சென்ற மாணவர்கள் கட்டிடத்தின் மேற்கூரை இடிந்ததை அறிந்து அதிர்ந்து நின்றனர்.

கோரிக்கை

பின்னர் மாணவர்கள் பள்ளியின் முகப்பு பகுதியில் அமர வைக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்றது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கஜா புயலின் போதே இந்த பள்ளி கட்டிடம் சேதம் அடைந்தது. இதனால் ஆபத்தான இந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிதாக கட்ட வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் தொடர்ந்து அந்த பழுதடைந்த கட்டிடத்திலேயே பள்ளி செயல்பட்டு வந்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் பள்ளி திறப்பதற்கு முன்பே அதிகாலை மேற்கூரை இடிந்து விழுந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக பெற்றோர்கள் தெரிவித்தனர். எனவே உடனடியாக இந்த பள்ளி கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story