மிட்டப்பள்ளியில் வீட்டில் மேற்கூரை பெயர்ந்து பாட்டி-பேத்தி காயம்
ஊத்தங்கரை
ஊத்தங்கரை அடுத்த மிட்டப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட காமராஜ் நகரில் 1000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பல வீடுகள் பழுதடைந்து இரும்பு கம்பிகள் தெரியும் அளவிலும், அன்றாடம் வீட்டின் மேற்கூரை காரைகள் பெயர்ந்து விழுந்து வருவது வழக்கமாக உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் வெங்கடேசன்-தேவகி தம்பதி. இவர்கள் மகள் மற்றும் பேரன் பேத்திகளுடன் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தனர். அப்போது வீட்டின் மேற்கூரை காரைகள் திடீரென பெயர்ந்து விழுந்தது. இதில் வீட்டில் தூங்கி கொண்டு இருந்த தேவகி, அவருடைய பேத்தி தர்ஷினி ஆகியோர் மீது விழுந்தது. இதில் அவர்கள் 2 பேரும் காயம் அடைந்தனர். இதையடுத்து அவர்களை குடும்பத்தினர் மீட்டு ஊத்தங்கரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பழுதடைந்த தொகுப்பு வீடுகளை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.