ஓட்டு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது
ஆரணி அருகே ஓட்டு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
ஆரணி
ஆரணி அருகே ஓட்டு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பரவலாக மழை
வடகிழக்கு பருவ மழை தொடங்கியதில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலையில் பகலில் மிதமான சாரல் மழை விட்டு, விட்டு பெய்தது. இரவில் பரவலாக மழை பெய்தது.
இந்த மழை விட்டு, விட்டு இன்று காலை வரை நீடித்தது. இதனால் திருவண்ணாமலை மற்றும் சுற்று வட்டார பகுதியில் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டு உள்ளது. இதேபோல் நேற்று மாவட்டத்தின் அனேக பகுதிகளில் பரவலாக மழை பெய்து உள்ளது.
வந்தவாசியில் 45.3 மி.மீ. மழை
இதில் அதிகபட்சமாக வந்தவாசியில் 45.3 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது.
மற்ற பகுதிகளில் பதிவான மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
ஆரணி- 36, வெம்பாக்கம்- 21.3, தண்டராம்பட்டு- 18.6, கீழ்பென்னாத்தூர்- 15.2, செய்யாறு- 10.3, போளூர்- 9.2, ஜமுனாமரத்தூர்- 9, சேத்துப்பட்டு- 5.6, கலசபாக்கம்- 3, திருவண்ணாமலை- 2.
மேற்கூைர இடிந்து விழுந்தது
ஆரணி நகரிலும் சுற்று வட்டாரத்திலும் நேற்று இரவு முதல் அதிகாலை வரை பலத்த மழை பெய்தது.
மழையின் காரணமாக ஆரணியை அடுத்த அடையபலம் கிராமத்தில் கூலி தொழிலாளி சண்முகம் (வயது 58) என்பவரின் ஓட்டு வீட்டின் மேற்கூரை இன்று காலை 8 மணி அளவில் இடிந்து விழுந்தது.
அப்போது சண்முகம், அவரது மனைவி ஆதிலட்சுமியும் வீட்டிலிருந்து வெளிப்பகுதியில் இருந்ததால் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதுசம்பந்தமாக ஊராட்சி மன்ற தலைவர் அசோக்குமார், வருவாய் ஆய்வாளர் ஸ்ரீதேவி, கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தி ஆகியோர் நேரில் சென்று பார்த்து ஆய்வு செய்தனர். மேலும் ஆரணி தாசில்தாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.