வீட்டின் கூரை சரிந்து விழுந்து மாற்றுத்திறனாளி பலி
லத்தேரி அருகே வீட்டின் கூரை சரிந்து விழுந்து மாற்றுத்திறனாளி பலியானார்.
சரிந்து விழுந்தது
கே.வி.குப்பம் தாலுகா லத்தேரியை அடுத்த சோழமூர் ஊராட்சி, ராமாபுரம் காலனியை சேர்ந்தவர் அன்பு (வயது 55). இவரது தம்பி ஜெயகுமார் (45). இவருக்கும் கண்பார்வை தெரியாது. இவர்கள் சுமார் 32 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீட்டில் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு இருவரும் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தனர்.
நள்ளிரவு நேரத்தில் ஜெயகுமார் எழுந்து வெளியே வந்தபோது திடீர் என வீட்டின் கூரை சரிந்து விழுந்தது. அப்போது உள்ளே இருந்த அன்பு இடுபாடுகளுக்குள் சிக்கி படுகாயமடைந்தார்.
மாற்றுத்திறனாளி பலி
அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டார். இதுகுறித்து புகாரின் பேரில் லத்தேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் கே.வி.குப்பம் தாசில்தார் அ.கீதா, துணை தாசில்தார் ப.சங்கர், வருவாய் ஆய்வாளர் சரவணன், கிராம நிர்வாக அலுவலர் குமரன் உள்ளிட்ட அதிகாரிகள் சென்று பார்வையிட்டனர். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் பெ.மனோகரன், இறந்த அன்புவின் ஈமச்சடங்கு செலவுக்காக ரூ.5 ஆயிரம் வழங்க உத்தரவு பிறப்பித்தார்.