தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தாய், மகள் படுகாயம்
தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தாய், மகள் படுகாயம்
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அருகே தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தாய், மகள் படுகாயம் அடைந்தனர். இருவரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வேலூர் மேலத்தெருவில் 1989-90-ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்திராகாந்தி குடியிருப்பில் தொகுப்பு வீட்டில் சேகர் மனைவி அன்பழகி(வயது 55), மகள் விஜயகுமாரி(20) ஆகிய இருவரும் நேற்று முன்தினம் இரவு தூங்கிக்கொண்டு இருந்தனர்.
நேற்று அதிகாலை அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தபோது வீட்டின் மேற்கூரையில் உள்ள சிமெண்டு காரை பெயர்ந்து தாய், மகள் மீது விழுந்தது.
படுகாயம்
இதில் அன்பழகிக்கு வலது கையிலும், விஜயகுமாரிக்கு நெற்றியிலும் காயம் ஏற்பட்டது. இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக திருத்துறைப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன் விசாரணை நடத்தி வருகிறார்.