தீயில் எரிந்து கூரை வீடு சாம்பல்
பொறையாறு அருகே தீயில் எரிந்து கூரை வீடு சாம்பலானது.
பொறையாறு:
பொறையாறு அருகே எருக்கட்டாஞ்சேரி வடக்கு மேட்டு தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன். இவருடைய மனைவி லட்சுமி. கூலி தொழிலாளர்களான இவர்கள், குடும்பத்துடன் கூரை வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று கணவன், மனைவி இருவரும் வெளியே சென்று விட்டனர். இந்த நிலையில் இவர்களது கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். அப்போது பலத்த காற்று வீசியதால் வீடு முழுவதும் தீபரவி கொளுந்து விட்டு எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தரங்கம்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் அருள்மொழி தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் வீடு முழுவதும் எரிந்து சாம்பலானது. இந்த தீவிபத்தில் வீட்டில் இருந்த பீரோ, பாத்திரங்கள், உடைகள், ரேஷன் கார்டு, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் எரிந்து சேதமடைந்தன. இதன் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து பொறையாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.