மண்டப மேற்கூரையில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்தது
வழுவூர் வீரட்டேஸ்வரர் கோவில் மண்டப மேற்கூரையில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்தது
குத்தாலம்:
குத்தாலம் அருகே வழுவூரில் வீரட்டேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோவிலில் இரண்டாம் ராஜராஜன் உள்ளிட்ட பல்வேறு சோழ மன்னர்கள் காலத்து கல்வெட்டுகள் உள்ளன. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த கோவிலில் பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டு முடிவடையாமல் உள்ளது. இதனால் கோவில் பராமரிப்பின்றி சிதிலமடைந்து வருவதாக பக்தர்கள் குற்றச்சாட்டி வந்தனர்.இந்த நிலையில் நேற்று மாலை பெய்த கனமழை காரணமாக இந்த கோவிலில் உள்ள கால சம்ஹார மூர்த்தி சன்னதியின் மண்டப மேற்கூரையின் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்தது. அப்போது இரவு நேரம் என்பதால் பக்தர்கள் யாரும் இல்லாத காரணத்தினால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பாரம்பரியமிக்க கோவிலை புதுப்பித்து உடனடியாக திருப்பணிகள் செய்து குடமுழுக்கு விழா நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.