விழுப்புரம் ரெயில் நிலையத்தில் சூறைக்காற்றில் பறந்த மேற்கூரைபயணிகள் அலறியடித்து ஓட்டம்


விழுப்புரம் ரெயில் நிலையத்தில் சூறைக்காற்றில் பறந்த மேற்கூரைபயணிகள் அலறியடித்து ஓட்டம்
x
தினத்தந்தி 15 Jun 2023 12:15 AM IST (Updated: 15 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பலத்த சூறைக்காற்று வீசியதில் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் மேற்கூரை பறந்தது. இதனால் பயணிகள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

விழுப்புரம்


விழுப்புரத்தில் கடந்த 2 வாரங்களாக பகலில் வெயில் சுட்டெரித்து வருகிறபோதிலும் மாலை, இரவு நேரங்களில் வெப்பச்சலனம் காரணமாக அவ்வப்போது பரவலாக மழை பெய்து மக்களின் மனதை குளிர்வித்து வருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் விழுப்புரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்தது. இந்த சூறைக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் விழுப்புரம் ரெயில் நிலைய வளாகத்தில் இருந்த மரங்கள், நகராட்சி பூங்காவில் இருந்த மரம், கிராம நிர்வாக அலுவலகத்தில் இருந்த மரம் என நகரின் பல்வேறு இடங்களில் இருந்த மரங்கள் முறிந்து விழுந்தன. இதன் காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

ரெயில் நிலைய மேற்கூரைபறந்தது

மேலும் பலத்த சூறைக்காற்று வீசியதன் காரணமாக விழுப்புரம் ரெயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக அமைக்கப்பட்டிருந்த மேற்கூரைகள் காற்றில் பறந்தது. ரெயில் நிலைய 2-வது மற்றும் 3-வது நடைமேடைகளில் தற்போது பழைய மேற்கூரைகள் அகற்றப்பட்டு புதிய மேற்கூரைகள் அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்தபோது திடீரென பலத்த சூறைக்காற்று வீசியதால் அப்பணியை ஊழியர்கள் பாதியிலேயே கைவிட்டனர்.

இதனால் சூறைக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அந்த மேற்கூரைகள் காற்றில் பறந்தது. இதை பார்த்ததும் நடைமேடையில் நின்றிருந்த பயணிகள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனால் பயணிகள் காயமின்றி தப்பினர்.

மழை ஓய்ந்ததை தொடர்ந்து நேற்று காலை, ரெயில் நிலையத்தில் மீண்டும் புதிய மேற்கூரைகள் அமைக்கும் பணி நடந்தது. மேலும் நகரின் மற்ற இடங்களில் முறிந்து விழுந்து கிடந்த மரக்கிளைகளை நகராட்சி ஊழியர்கள், தீயணைப்புத்துறையினர் அப்புறப்படுத்தியதை தொடர்ந்து சீரான மின் வினியோகம் செய்யப்பட்டது.


Next Story